Saturday, May 28, 2011

மக்களுக்கு எதிராக மக்களாட்சி.

உதயை மு. வீரையன்


நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் மக்களின் தீர்ப்பு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அதிரடித் தோல்வியைச் சந்தித்தன. அசாம் மட்டுமே தப்பிப் பிழைத்தது. இதற்கு என்ன காரணம்?

"மக்களாட்சி' என்பது மக்களுக்கு எதிராகவே நடத்தும் ஆட்சி எனப் புதிய கொள்கை உருவாக்கிக் கொண்டதுதான். எப்படியோ திரட்டிய கறுப்புப் பணத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றனர். பிறகென்ன? ஐந்தாண்டுகளுக்குக் கவலையில்லை. கட்சிகளின் ஆட்சியில் மக்களை மதிப்பதில்லை. மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதை, கங்கா எக்ஸ்பிரஸ் பாதை என்னும் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு கோரி நொய்டாவின் புறநகர்ப் பகுதியான பட்டா பர்சால் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகளும், காவல்துறையினரும் என நான்குபேர் பலியாயினர்.

இதனால் அங்கே காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் குடியிருப்புகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நொய்டாவில் நடைபெற்ற வன்முறைகளுக்கு ஆளும் அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சர் மாயாவதியின் சொந்த மாவட்டத்திலேயே விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கவும் அரசு முயல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர் மீது இருபதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாய சங்கத் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய தோழர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது. அத்துடன் அவர்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றம் நீடிக்கவே செய்கிறது.

நாட்டின் உயிர்நாடியான விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திலும் கவலைக்குரியதாகவே மாறி வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவர்களுக்காகக் குரல்கொடுப்பதும், அவர்களே ஆளும் கட்சியாக மாறியதும், அதே விவசாயிகளை ஒடுக்குவதும் வாடிக்கையாகிவிட்டது, இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே அரசியல் கட்சிகள் மக்கள் நலம் நாடுபவர்களாக இருக்கின்றனர்.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைப்பதற்காகவே மக்களை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக ஆளும் மாயாவதி குற்றம்சாட்டுகிறார். சட்டம் இயற்றி ஒழுங்குபடுத்த வேண்டிய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்னைகளை அரசியலாக்கவே விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் அவசியம் என்றும், வளர்ச்சிப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு, விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஆகியவை மத்திய அரசின் உத்தேச மசோதாவில் வலியுறுத்தபட்டுள்ளன என்றும் அக்குழு கூறியுள்ளது.

இத்தகைய பிரச்னைகளுக்குச் சட்ட அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க இயலாது என்றும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசுதான் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உழைத்து, உழைத்து ஓடாகிப்போன விவசாயிகள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகின்றனர். விவசாயிகள் சங்கத்தலைவர் மேல் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுத்து தேடுதல் வேட்டை நடத்துவதும், அவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. ஒடுக்கப்பட்டவர் ஆட்சியில் உணவு உற்பத்தி செய்பவர் நிலங்களை இழந்து நிர்கதியாகத் தெருவில் நிற்க வைப்பது சரியாகுமா?

தேசிய மனித உரிமை ஆணையம் இதை வன்மையாகக் கண்டித்துள்ளது. நொய்டாவில் இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கவலையளிக்கிறது என்றும், காவல்துறையினர் அத்துமீறி விவசாயிகளின் வீடுகளுக்குள் நுழைந்திருப்பது பற்றிப் புகார் வந்துள்ளது என்றும், இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் நின்றால் தூண்டிவிடுவதாகப் புகார் கூறுவது எல்லாம் ஆளும் கட்சிகளுக்கும் வழக்கமானதுதான். இதே ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைத் தானே செய்தன?

மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணுமின் நிûலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது, காவல்துறையினரைக் கொண்டு அரசு தாக்குதல் நடத்தியது. அப்போது காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதனால் பலியானவருக்காக முழு அடைப்பும் அதைத் தொடர்ந்து வன்முறையும், பதற்றமும் பரவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடையுத்தரவு போடப்பட்டது.

ஜெய்தாப்பூரில் அமைக்கவிருக்கும் 6 மின் உலைகளைக்கொண்ட இந்த மின் நிலையம் உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம், அதனால் ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள அணு உலைகளின் குளிர்விப்பான்கள் செயலிழந்து கதிர்வீச்சுப் பரவியதால் இங்கும் போராட்டம் தீவிரமடைந்தது.

அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட அரசு மறுப்பது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானது ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், "அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் சதி' என அரசு கூறியது.

இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. "ஜெய்தாப்பூர் திட்டத்துக்காக பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் அணு உலைகள் இதுவரை உலகில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது' என்று அது தெரிவித்துள்ளது.

ஆனால், இதை மகாராஷ்டிர அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அத்துடன் காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது, அணுமின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் வன்முறை நடந்தது ஆகியவற்றுக்குப் பின்னணியில் அரசியல் சதி ஏதும் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இது எப்படி இருக்கிறது?

அணுமின் நிலையம் என்பது உலகம் முழுவதும் அழிவையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெரிய வல்லரசு நாடான ரஷியாவின் செர்னோபிலில் நடந்த அணு உலை வெடிப்பை மறக்க முடியுமா? இப்போது ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்துச் சிதறி மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

நமது நாட்டில் போபால் நச்சுக்காற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, அவர்களது சந்ததியினரும் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சுக்குப் பாதுகாப்புத் தேட முடியுமா?

மக்கள் எதிர்ப்புக்குக் காரணம் இதுதான். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த மாநில அரசு இல்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இதுவே.

இடதுசாரிக் கட்சிகளின் பிடியில் 34 ஆண்டுகள் இருந்த மேற்கு வங்க மாநில அரசு இந்தத் தேர்தலில் சரிந்து போனதற்குக் காரணம் என்ன? மாநில முதல்வராக ஜோதிபாசு இருந்தவரை சுமுகமாகவே இருந்தது. அவர் ஓய்வுபெற்ற பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானதும் பிரச்னைகள் ஆரம்பமாயின.

சிங்கூரிலும், நந்திகிராமிலும் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியபோதுதான் விவசாயிகள் வெகுண்டெழுந்தனர்.

மேற்கு வங்க அரசு எல்லா அரசுகளையும்போல காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முனைந்தது; கட்சிக்காரர்களையும் களத்தில் இறக்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் களத்தில் இறங்கியது. இரண்டு பக்கமும், உயிர் இழப்புகளும், சேதங்களும் அதிகமாயின. தொழிலதிபர் டாடா வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது; இப்போது ஆளும் கட்சியே வெளியேற்றப்பட்டுவிட்டது.

அரசாங்கம் என்பது மக்களுக்கு விருப்பமானதைச் செய்வதல்ல; மக்களுக்குத் தேவையானதைச் செய்வதுதான். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்கள் சுயநலத் தேவைகளுக்காகச் செயல்படும்போது மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

மக்களின் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கக் கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்வரை வாய்மூடியே இருப்பார்கள். எரிமலைகூட பார்ப்பதற்கு அமைதியாகத்தான் தெரிகிறது.

No comments: