Friday, April 8, 2011

என்னை எப்படி நீங்கள் ஊழல்வாதி என்று கூறலாம்? - ஜெயலலிதா.


கருணாநிதியோடு சேர்த்து என்னை எப்படி நீங்கள் ஊழல்வாதி என்று கூறலாம் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட அவரிடம் வட இந்திய ஆங்கில சேனல் ஒன்று சிறப்புப் பேட்டி கண்டது. அப்போது ஜெயலலிதா கூறுகையில், உங்களைப் போன்ற வட இந்திய மீடியாக்கள், டிவி சேனல்கள், பத்திரிக்கைகள் தமிழகத்தைப் பற்றி குறிப்பிடும்போது ஒரு பெரிய தவறை செய்கின்றன.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஊழல்வாதிகள் என்று குறி்ப்பிடுகிறீர்கள். கருணாநிதி பெரிய ஊழல் பேர்வழி. ஆனால், நான் என்ன ஊழல் செய்தேன்?. என் மீது பொய்யான ஊழல் வழக்குகளை கருணாநிதி போட்டார். அதில் 12 வழக்குகளில் நான் விடுதலை ஆகிவிட்டேன். அப்படியிருக்கையில் கருணாநிதியைப் போலவே நீங்களும் என்னை எப்படி ஊழல்வாதி என்று கூறலாம்.

நான் ஊழல்வாதி அல்ல. எனது கட்சியும் ஊழல் கட்சி அல்ல என்று கடிந்து கொண்டார் ஜெயலலிதா.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின்னரும் நீடிக்குமா என்று கேட்டதற்கு, தேர்தல் முடிவுக்குப் பின் இதற்கு பதில் சொல்கிறேன் என்றார்.

ஆனால் கூட்டணி கட்சிகள் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கவில்லை.

கருணாநிதிக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, I wish him bad luck என்றார்.

முன்னதாக திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தருகிற தேர்தல். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்குவது சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி தான். தமிழ்நாட்டில் இப்போதுள்ள நிலைமையை நான் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை.

மின்சாரத்தை பொறுத்த அளவில் கடந்த 5 ஆண்டாக மின்வெட்டு அமலில் உள்ளது. மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் தேவையான இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் இருக்கிற அனைத்து தொழில்களும் நலிவடைந்து விட்டன. தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. வேலை இல்லா திண்டாட்டம் பெருகி விட்டது.

தமிழக மக்களாகிய நீங்கள் தான் தெய்வங்கள். தமிழக மக்களே நல்ல தீர்ப்பு தாருங்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

நூல் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. உயர்நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் 750க்கும் மேற்பட்ட சாய, சலவைப்பட்டறைகள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்தொழில் முடங்கும் நிலைக்கு வந்து விட்டது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாய நிலம் பாதிக்கப்படாத வகையிலும், நிலத்தடிநீர் மாசுபடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி மூடப்பட்ட சாய, சலவைப்பட்டறைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து கடலுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் மின்வெட்டு, நூல்விலை உயர்வு, தவறான ஏற்றுமதி கொள்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி உள்ளடக்கிய ஜவுளித்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் பனியன் தொழிலுக்கு விதிக்கப்பட்டு உள்ள 10 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவோம். நெசவாளர்களை பாதுகாக்க அனைத்து வகை நடவடிக்கையும் எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறைப்படுத்தப்படும்.

100 நாள் வேலையளிப்பு திட்ட ஊதியத்தின் முழு பயனும் தொழிலாளர்களுக்கு சென்றடையவும், கூடுதல் நாள் வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். அவற்றை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தொழில்கள் துவங்க தொழில் முனைவோர் ஆர்வம் காட்டாததால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. லஞ்சமும், ஊழலும் பரவியுள்ளது. இதனால், இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அனைவரும் ஏங்கும் நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தன் குடும்பத்தினரை தவிர வேறும் யாரும் புதியதாக தொழில்புரியக் கூடாது என நினைப்பதால் சினிமா, பத்திரிகை, மணல், கிரானைட், கேபிள் டிவி என அனைத்து துறைகளையும் கைப்பற்றிவிட்டு மீதமுள்ள துறைகளையும் அபகரிக்க 6வது முறையாக ஆட்சிக்கு வரத் துடிக்கிறார் கருணாநிதி.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தாலே போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். அதைவிடுத்து உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார் கருணாநிதி. அதனால், ஒரே நாளில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழினத்தை பாதுகாப்பதற்கு பதிலாக தன் குடும்பத்தை பாதுகாப்பதுதான் கருணாநிதியின் முக்கியக் குறிக்கோளாகும்.

தமிழினம் பெரும் துயரத்தில் இருந்தபோது செம்மொழி மாநாட்டை நடத்தினார். அதில், கருணாநிதியின் குடும்பத்தினர் முன்வரிசையில் அமர்ந்து கொண்டதால் தமிழறிஞர்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர். தமிழறிஞர்கள் கௌரவிக்கப்படுவதற்கு பதிலாக கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களே கௌரவிக்கப்பட்டனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் தொடர்புள்ளது. இருப்பினும், இவ்விவகாரத்தில் மாட்டிக் கொண்டவர் ஆ. ராசா, உயிரை விட்டவர் சாதிக் பாட்ஷா. இவ்வளவு பெரிய ஊழல் நடந்தும் வெட்கமின்றி கருணாநிதி குடும்பத்தினர் வாக்குகள் கேட்டு வருகின்றனர். பேரவைத் தேர்தலுக்காக 2ஜி வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தண்டனை தரக்கூடிய சக்தி மக்கள்தான். இவற்றை அப்படியே விட்டுவிட்டால் தமிழ் மக்களை விரட்டிவிட்டு தமிழகத்தையே திமுகவினர் குடும்ப வசமாக்கிவிடுவர். அதைத் தடுக்க ஜனநாயக நாட்டில் ஒரே வழி தேர்தல். வரும் தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அனைத்து திட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும். எனவே அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

பின்னர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.


No comments: