Friday, April 8, 2011

அதிமுக பெண்ணின் கடையில் டீ சாப்பிட்ட ஸ்டாலின்.

அதிமுகவைச் சேர்ந்த பெண்மணி நடத்தி வரும் டீக்கடைக்கு திடீரென விஜயம் செய்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு டீ வாங்கி சாப்பிட்டது கலகலப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் சமத்தில் இதுபோன்ற சிறு சிறு கலகலப்புக் காட்சிகள் அரங்கேறும். சென்னை அருகே அதிமுக கூட்டணியினர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றபோது திமுகவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, அதிமுக கூட்டணியினருக்கு துண்டு அணிவித்து அசத்தினார்.

அதேபோல நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த பெண்மணி நடத்தி வரும் டீக் கடைக்குச் சென்று டீ சாப்பிட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.

குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெப்படை செல்வராஜை ஆதரித்து குமாரபாளையம் நான்கு ரோடு பகுதியில் பிரசாரம் செய்தார் ஸ்டாலின். பின்னர் வெப்படைக்கு அவர் கிளம்பினார். வழியில் மேட்டுக்காடு என்ற கிராமத்தில் ஸ்டாலின் வண்டி நின்றது. வேனிலிருந்து இறங்கிய அவர் சாலையோரமாக இருந்த ஒரு டீக்கடைக்குள் புகுந்தார்.

அங்கிருந்த தனலட்சுமியிடம் டீ கொடுக்குமாறு கேட்டார். இதை எதிர்பாராத தனலட்சுமி மிகுந்த சிரிப்புடன் டீ போட்டுக் கொடுத்தார். அப்போதுதான் கடையில் மாட்டியிருந்த காலண்டரைப் பார்த்தார் ஸ்டாலின். அது அதிமுகவினர் அடித்திருந்த காலண்டராகும்.

இதையடுத்து நீங்க அதிமுகவைச் சேர்ந்தவரா என்று கேட்டார் ஸ்டாலின். அவரும் ஆமாம் என்றார். பின்னர் டீக்கு எவ்வளவு காசு என்று ஸ்டாலின் கேட்கவே, தனலட்சுமி புன்னகையுடன் வேண்டாம் என்று கூறினார். ஸ்டாலின் வந்தது அவருக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்ததைக் காண முடிந்தது.

பின்னர் வெளியில் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்செயலாக டீ குடிக்க இந்த கடைக்கு வந்தேன். ஆனால், இந்த கடை அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் நடத்தும் கடை என்பது எனக்கு தெரியாது.

கடையில் இருந்த பெண் மாற்றுக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், மனதார எனக்கு டீ போட்டு தந்தார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தலைவர் கருணாநிதி கடந்த 5 ஆண்டுகளாக செய்த சாதனை திட்டங்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது தான் என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலின் டீக்கடைக்கு வந்த தகவல் அறிந்து நிறைய பேர் கூடி விட்டனர். பெண்கள், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்டாலினைப் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் ஸ்டாலினிடம் குழந்தைகள் ஆட்டோகிராப் கேட்கவே அவரும் மகிழ்ச்சியுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பின்னர் கோவிலாங்காடு என்ற இடத்தில் ரயில்வே ஊழியர் சிவலிங்கம் என்பவரது வீட்டுக்கும் ஸ்டாலின் சென்றார். அதை எதிர்பார்க்காத சிவலிங்கம் குடும்பத்தினர் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்க ஸ்டாலினை வரவேற்றனர். அவரிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கவே, இப்போதுதான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று ஸ்டாலின் கூறினார்.

பிறகு அவர்களிடம் யாருக்கு ஓட்டுப் போடுவீங்க என்று ஸ்டாலின் கேட்கவே, உங்களுக்குத்தான் என்றனர் அவர்கள்.

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்:

பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தலைமையில் நடப்பது குடும்ப ஆட்சிதான். முதல்வர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் தங்களது குடும்ப உறுப்பினராகக் கருதித்தான் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இவை தவிர, திருமண உதவித் திட்டம், சத்துணவில் வாரத்துக்கு 5 முட்டைகள் திட்டம், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

1 comment:

எனது கவிதைகள்... said...

This is business technique sir !

unmaivrumbi.
Mumbai,