Friday, April 8, 2011

ஐபிஎல் - 4 திருவிழா இன்று துவக்கம் : சென்னையில் முதல் போட்டி.


இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல்லின், நான்காவது போட்டித் தொடர் இன்று சென்னையில் விமரிசையாக தொடங்குகிறது.

இதுவரை நடந்த 3 சீசன்களிலும் வீரர்களும், அணிகளும் பட்டையைக் கிளப்பி கிரிக்கெட் ரசிகர்களை துள்ளலில் ஆழ்த்தின. முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது கோப்பையை ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸும் கைப்பற்றின. கடந்த முறை நடந்த 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனானது.

இந்த நிலையில் நாளை 4வது போட்டித் தொடர் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டித் தொடர்கள் இந்தியாவிலும், 3வது தொடர்தென் ஆப்பிரிக்காவிலும் நடந்தது. இந்த முறை மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

நாளை முதல் வரும் மே மாதம் 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கின்றன. இம்முறை ஏற்கனவே இருக்கின்ற 8 அணிகளோடு புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இன்னொரு அணியிலும் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தத்தமது லீக் பிரிவில், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.

இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். சென்னை, மும்பை அணிகளை தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய்துள்ளன. கடந்த 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தற்போது வெவ்வேறு அணிகளில் விளையாடுகின்றனர்.

அதிக ஏலத்தொகைக்கு போன கம்பீர் கடந்த 3 சீசனிலும் டெல்லிக்கு விளையாடினார். ஆனால் இம்முறை கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார். இதேபோல ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய யூசுப் பதான் தற்போது கொல்கத்தா அணியில் உள்ளார். சென்னை அணியில் இருந்த முத்தையா முரளிதரன் தற்போது கொச்சி அணியில் உள்ளார்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.

4-வது ஐபிஎல் திருவிழாவின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடக்கிறது.

அதன் பின்னர் 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் ஐபிஎல் வெடி நாளை முதல் வெடிக்கப் போகிறது. சரவெடியாக தொடர்ந்து 50 நாட்கள் பட்டாசு கிளப்பப் போகும் இந்த மத்தாப்புப் போட்டிகளைக் காண ரசிகர்கள் ரகளையாக தயாராகியுள்ளனர்.

செட் மாக்ஸ் டிவியில் இந்தப் போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் கண்டுகளிக்கலாம்

No comments: