Friday, April 8, 2011

தேர்தல் ஆணையத்தின் கண்களில் மிளகாய் தூவ அ.தி.மு.க. ரெடி.


நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சுவர் விளம்பரங்கள், பேனர், கட்அவுட், தோரணங்கள், உட்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் தடை செய்துவிட்டது.

தேர்தல் என்றாலே திருவிழாவாய் காட்சிதரும் தொகுதிகள் தற்சமயம் வெறிச்சோடி கலையிழந்து காணப்படுகிறது. கூட்டமாய் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிகழ்வுகளையும் காணவில்லை.

இதை விடக் கொடுமை என்னெவென்றால், தேர்தல் ஆணையத்தின் இது போன்ற நடவடிக்கைகளினால் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிய முடியவில்லை என்பதும் வருத்தத்திற்குறிய உண்மையே..

பழைய செய்தித் தாள்களை பத்திரமாக பக்கத்தில் வைத்திருப்பவர் வேண்டுமானால் இத் தகவல்களை அறிய முடியும், என்றால் பாமரனின், படிக்காதவனின், உலக அறிவற்ற தாய்க் குலங்களின் நிலை தான் என்ன?

செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னங்களுக்கு மட்டுமே ஓட்டு போட்டு பழகி வந்தவர்களும் இன்று தடுமாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது விழிப்புணர்வால் அல்ல. வழக்கமான சின்னத்திற்குறிய வேட்பாளர் யார் என்ற தடுமாற்றத்தினாலே!

தொகுதி மறு சீரமைப்பால் அறிந்தவனின், கற்றவனின் நிலையும்கூட இதை ஒட்டியே இருக்கிறது.

வேட்பாளர்கள், அதிலும் இரண்டுமுறை, மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினர்களாய் இருந்தவர்கள்கூட தொகுதி மாறி பிரச்சாரம் செய்தவற்றை கண்கூட காணமுடிகிறது.

சுயேட்சை வேட்பாளர்கள் சுனாமியில் அடித்துச் செல்லும் மீனாக இருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியாகட்டும், எதிர்கட்சியாகட்டும், நாளை ஆள்வேன் என்று சொல்பவர்களாகட்டும், வெற்றி குறித்த ஐயப்பாடு, மதில்மேல் பூனையாக இல்லாமல் யானையாகவே காட்சி தருகிறது.

இந்நிலையில்தான் சிவகாசி பகுதி அதிமுக அதிரடியாய் ஒரு அறிவிப்பை ஆட்டோவில் செய்து கொண்டு சென்றது.

அன்பார்ந்த தாய்க்குலங்களே, வருகிற 13ம் தேதி தேர்தல் நாளன்று காலையிலே உங்கள் வீட்டு வாசலில் இரட்டை இலை சின்னத்தை கோலமாக போட்டுவைக்க கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம், எல்லோருக்கும் நமது சின்னமான இரட்டை இலையை பதியவைக்க அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஆட்டோவில் அறிவிப்பு பரபரப்பாய் பறந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன செய்யும்?



No comments: