Friday, April 8, 2011

சென்னையில் 4வது ஐபிஎல் போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்கியது.


4வது ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர் இன்று மாலை சென்னையில் கோலாகலமான கலை விழாவுடன் தொடங்கியது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகள் வருடத்திற்கு ஒருமுறை நடந்து வருகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியனானது. 2009ல் நடந்த போட்டித் தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பட்டம் வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 2010ல் நடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது.

இந்த நிலையில் தற்போது 4வது போட்டித் தொடர் இன்று தொடங்கியது.

இன்று தொடங்கி மே 28ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்துள்ளன.

இதுவரை இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய எட்டு அணிகளுடன் புதிதாக சஹாரா புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரு அணிகளும் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் போட்டி நடைபெறவுள்ளது.

கோலாகல தொடக்க விழா.

இன்று மாலை ஆறரை மணியளவில் தொடக்க விழா நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் ஐபிஎல் ஆணையர் சிரயு அமீன் தொடக்க உரையாற்றினார். பின்னர் பத்து அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழிக் கையெழுத்தை இட்டனர். அதன் பின்னர் போட்டி தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தொடக்க விழா தொடங்கியது. இதில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு அழகிகள், நடிகைகள் உள்ளிட்டோர் ஆடிப் பாடி, ரசிகர்களை குஷிப்படுத்தவுள்ளனர். சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை அளிக்கிறார். அவரும் நடிகை ஷ்ரியாவும் இணைந்து இந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆடுகின்றனர்.

சுனிதி செளகான், குனால் கஞ்சாவாலா, சோனா மொஹபாத்ரா, அக்ரிதி காக்கர் ஆகியோர் பாடவுள்ளனர்.

முதல் போட்டி.

தொடக்க விழாவுக்குப் பின்னர் இரவு 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் குஷியுடன் தயாராகி வருகின்றனர்.

இரு பிரிவுகள்.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் இடங்கள்.

சென்னை, பெங்களூர், டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நவி மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும்.

பழைய அணிகள் எட்டிலும் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வரை ஒரு அணிக்காக ஆடிய பல வீரர்கள் இந்த முறை அணி மாறியுள்ளனர்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.


No comments: