Friday, April 8, 2011

கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.


கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா? கி.வீரமணி.

மற்ற மாநிலங்களில், மனிதனை மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இன்றைக்கும் இருக்கிறதே, கலைஞர் வந்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா திட்டம் கொண்டு வந்தார். அதுதான் மனித நேயம். எனவே நம்முடைய எதிர்காலத்திற்கு, வாழ்வதற்கு பெரிய வாய்ப்புகள் கொடுக்கும் கலைஞர் ஆட்சி தேவையா? அம்மா ஆட்சி தேவையா?

இந்தத் தேர்தலை, மக்கள் தேர்தல் களமாகப் பார்க்கவில்லை. இனப்போராட்ட களமாக, திராவிடர் ஆரியர் போராட்டமாகக் கருதுகிறார்கள். அதை எங்களைப் போன்றவர்கள் உணர்கிறோம். இது ஸ்ரீக்கும், திரு-வுக்கும் போராட்டம், பரம்பரைப் போராட்டம். ஏனென்றால் அவர்கள் தங்கள் பரம்பரையைத் தேடிப் போய் இருக்கிறார்கள்.

உழைக்கின்ற, பாட்டாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மறுக்கப்பட்டு இருந்ததை மாற்றி, திராவிடர் சமுதாயம் மூலம் ஒரு வளர்ச்சியை, எழுச்சியை பெற கலைஞர் அரசு பாடுபட்டுக்கொண்டு வருகிறது. சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.

தேர்தல் என்பது இது ஒரு கட்சிப் பிரச்சனை அல்ல. மதப் பிரச்சனை அல்ல. மாறாக நம் இனத்தின் வாழ்க்கை பிரச்சனை இதில்தான் நம் இனம் வாழ்வதா? வீழ்வதா? என்ற நிலை அடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில்தான் அனைத்து மக்களும், சிறுபான்மை மக்களுடன் உறவுக்காரர்கள் போன்று செயல்பட்டு, பழகிக்கொண்டு இருக்கிறோம். இதுபோல் வேறு நாட்டில் உண்டா. வேறு மாநிலத்தில்தான் உண்டா. மக்களிடையே வெறுப்பை தூவுவதற்கு, தூண்டுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் வருகிறது.

திராவிடர் இயக்கம் வளர்ந்தால், சிறுபான்மை சமுதாயமாக இருந்தாலும், பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், எல்லோரும் கைகோத்துக்கொண்டு சகோதரர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய ஒற்றுமையாளர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலை மற்ற அமைப்புகள் வந்தால் தொடராது. எனவே, கலைஞர் தலைமையில் உள்ள அணி வெற்றி பெறுவது யாருடைய சுயநலத்திற்காகவும் அல்ல. தமிழ் இனத்தின் மீட்புக்காக, எதிர் காலத்திற்காக. இவ்வாறு கி.வீரமணி பேசினார்.


கலைஞரின் உயர் எண்ணமும் ஜெயலலிதாவின் உருமாறும் எண்ணமும்.


பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அந்த அம்மா ஆட்சியில் தற்காலிகமாக வேலைக்கு ஆள்களை எடுத்தார்கள். சிறிது காலம் கழித்து அவர்கள். தங்களை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டம். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த அம்மா அவர்களை பணியில் இருந்து தூக்கி விட்டு தனது கட்சிக்காரர்களை வேலையில் அமர்த்தினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கலைஞரிடம், அவர்களின் பதவிக் காலம் முடிவடையப்போகிறது எங்களுக்கு அந்த பணியை வழங்குங்கள் என்று கேட்டார்கள்.

நாங்கள் எல்லாம் உடன் இருந்தோம். உடனே, கலைஞர் சொன்னார் அவர்கள் யாராக இருந்தாலும் நம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் வேலையில் இருக்கட்டும் என்று கூறியதோடு புதிதாக வேண்டுமானால் வேலைக்கு ஆள்களை சேர்த்துக்கொள்ளலாம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்றவர் கலைஞர்.

அந்த அம்மா ஆட்சியில் என்ன செய்தார் என்றால், 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார். அதை எப்படியோ கம்யூனிஸ்ட் நண்பர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். இதிலிருந்து தெரிகிறதா? கலைஞரின் உயர் எண்ணமும், அந்த அம்மாவின் உருமாறுகின்ற எண்ணமும். இவ்வாறு கி.வீரமணி பேசினார்


No comments: