Monday, April 25, 2011

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது : அத்வானி குற்றச்சாட்டு.

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது; அத்வானி குற்றச்சாட்டு

2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களுக்கு வெளிப்படையாகவே லஞ்சம் கொடுத்தது முதல் மத்திய அரசின் அனைத்து ஊழல்களும் வெட்கக் கேடானவை என பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இணைய தளத்தில் தன்னுடைய பிளாக் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் விமர்சன கட்டுரையை எழுதி வருகிறார். நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அந்த கட்டுரையில் அத்வானி கூறியுள்ளதாவது:-

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் தான் மிக தீவிரமான கட்டத்தை அவர் எதிர் நோக்கினார். பெரும்பான்மையை இழந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பி.க்களை வெளிப்படையாகவே விலைக்கு வாங்கியது மிகவும் வெட்கக் கேடான செயலாகும். அப்போது, தங்களுக்கு அளித்த பணத்தை பாராளுமன்றத்திலேயே பா.ஜனதா எம்.பி.க்கள் கொண்டு வந்து கொட்டினார்கள். இதை, `விக்கிலீக்` இணைய தளமும் தற்போது வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சதீஷ் சர்மா வீட்டில் இரண்டு பெட்டி நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 கோடி பணத்தை அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து வந்து காட்டி இருக்கின்றனர். அதை விக்கி லீக் அம்பலப் படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியில் போலவே, இரண்டாவது ஆட்சியிலும் ஊழல்கள் தொடருகின்றன. மன்மோகன் சிங் அரசின் தொடர்ச்சியான ஊழல்களும், சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடி கேள்விகள் மற்றும் கண்டனங்களும் நாள் தோறும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் நிகழ்ந்த கதிர்வீச்சு சம்பவத்துக்கு பிறகும் அதில் இருந்து பாடம் படிக்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அனைவருமே பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. மாறாக, புதிய அணுமின் உலைகள் அமைப்பது பற்றிய பாதையிலேயே செல்கின்றனர். மராட்டிய மாநிலம் ஜெய்தாபுரில் அணுமின் நிலையத்தை அமைப்பதில் சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் பிடிவாதம் காட்டுகிறார். ஜப்பானில் ஏதாவது சுற்றுச் சூழல் ஆர்வலர் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது. பூகம்ப அபாய பகுதியில் அந்த அணுமின் நிலையம் அமைந்திருக்கிறது.

இதை எதையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க அணுமின் நிறுவனங்களின் வர்த்தக நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது.

இவ்வாறு அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

No comments: