Monday, April 25, 2011

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்

ஆன்மிக வள்ளல் என்று உலகமே புகழும் ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 70 ஆண்டுகளாக செய்த சித்தாடல்கள் ஏராளம். அவர் கையை ஒரு சுழற்று சுழற்றினால் கைக்கடிகாரம், மோதிரம், பூ இனிப்பு என்று வந்தன. அவற்றை பெற்றவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்தன.

சாய்பாபா முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு சென்றாலே மனம் அமைதியாகி, பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக லட்சக்கணக்கானோர் கூறினார்கள். இதன் காரணமாகத்தான் சாய்பாபாவிடம் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக திரண்டது.

அதை வைத்து 1972-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையை சாய்பாபா தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபா இருந்தார். செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக மும்பை தொழில் அதிபர் இந்துலால் ஷா, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி, டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு வருமான வரி தாக்கல் ஆவணத்தின்படி புட்டபர்த்தியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புப்படி ரூ.40 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சுமார் 180 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வருவாய், சொத்துக்களை கணக்கிட்டால் அது ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சொத்து தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபாபா தனது சமூக சேவையை தன் ஊரில் இருந்தே தொடங்கினார். புட்டபர்த்தியை எல்லா வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றினார். தனக்கு வந்த நன்கொடை பணத்தையெல்லாம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு வாரி, வாரி வழங்கினார்.

ஐசக் டைகுரட் என்ற அமெரிக்க நாட்டுக்காரர் 1991-ம் ஆண்டு சாய்பாபா அறக்கட்டளைக்கு 300 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த பணத்தை கொண்டு புட்டபர்த்தியில் 10 மாதத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையை உருவாக்கினார். 360 படுக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக எல்லாவித சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல பெங்களூரில் ரூ.500 கோடி மதிப்பில் மற்றொரு நவீன மருத்துவ மனையை கட்டினார். புட்டபர்த்தியில் மருத்துவமனை தவிர பல்கலைக்கழகம், உலக ஆன்மீக மியூசியம், அறிவியல் கோளரங்கம், ரெயில் நிலையம், விளையாட்டு ஸ்டேடியம், இசை கல்லூரி, விமான நிலையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம் போன்றவை சாய்பாபா ஆசீர்வாதத்தால் கட்டப்பட்டன.

இவை தவிர நாடெங்கும் 1200-க்கும் மேற்பட்ட சத்யசாய் வழிபாட்டு மையங்கள் உள்ளன. சுமார் 180 நாடுகளில் கல்வி, கலாச்சார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 .5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் 5 லட்சம் கோடியை தாண்டும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

No comments: