Monday, April 25, 2011

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை!

சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள
குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

சொந்தமாக கார் வைத்திருக்கிறவர்கள் போதிய நேரம் இல்லாமையினாலோ, சோம்பேறித்தனத்தாலோ தங்களுடைய காரை தண்ணீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்வதில்லை. கார் சர்வீஸýக்கு விடும்போது சுத்தமாவதே போதும் என்று இருந்துவிடுகின்றனர். ஆனால் ஆய்வு தெரிவிக்கும் தகவல்கள் வயிற்றைக் குமட்ட வைக்கிறது.

கார் ஸ்டீயரிங் வீலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, பொது கக்கூஸின் பேசினில் இருப்பதைவிட 900% அதிகமாக இருக்கிறதாம். உவ்வே...

காரில்போகும்போதுதான் நொறுக்குத்தீனி தின்பது வழக்கம். தெருவோர பஜ்ஜி கடையிலிருந்து வாங்கும் பண்டங்களையும் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டீயரிங் வீலில் எண்ணெயைத் தடவுகிறவர்களே அதிகம் (லண்டனிலுமா?).

பொது கக்கூஸில் ஒரு சதுர அங்குலத்துக்கு 80 கிருமிகள் இருந்தால் கார் ஸ்டீயரிங்கில் 720-க்கும் மேல் இருக்கிறதாம். (கிளவுஸ் போட்டுத்தான் இனி ஓட்ட வேண்டும்!)

கார் உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்டுக்கு ஒருமுறைதான் காரின் உள்ளே சுத்தம் செய்கின்றனர். காரில் சாப்பிடுவதால் மட்டும் அல்ல இருமுவதால், தும்முவதால், சளி ஒழுகும்போது மூக்கையும் துடைத்து கர்ச்சீப் இல்லாவிட்டால் கதவு, சீட், டாஷ் போர்டு, ஸ்டீயரிங் வீல், கூரை என்று எங்கு வேண்டுமானாலும் துடைப்பதால் கிருமிகள் பரவுகின்றன.

காரிலேயே டிக்கி என்று அழைக்கப்படும் அதன் பின் பகுதி இருக்கிறதே அதை தெரு குப்பைத்தொட்டி என்றே சொல்லிவிடலாம். அதை பெரும்பாலும் அடைத்தே வைத்திருப்பதால் கிருமிகள் ஆனந்தமாக அங்கே இனப்பெருக்கம் செய்து குடும்பம் நடத்துகின்றன. அதிகமில்லை, ஜென்டில்மென் - ஒன்றரை சதுர அங்குலத்துக்கு 1,000 பாக்டீரியாக்கள்தான் - இருக்கின்றனவாம்.

பாசிலஸ் செரியஸ், ஆர்த்ரோ பாக்டர் என்ற இருவகை பாக்டீரியாக்கள்தான் காரில் அதிகம் காணப்படுகின்றன. இது இருக்கும் பண்டத்தை சமைத்துச் சாப்பிட்டால் நான் ஸ்டாப் (வயிற்றுப் போக்கு) கொண்டாட்டம்தான்!

இதில் ஆர்த்ரோ பாக்டர் மண்ணில்தான் பெரும்பாலும் இருக்கும். கார் போகும்போது எழும் தூசியில் கலந்து காரில் வந்து விழும். மனிதர்களின் தோலிலும் இது இருக்கும்.

காரின் சுகாதாரம் ஒருபுறம் இருக்கட்டும், கார் பராமரிப்பு எப்படி என்றும் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

66% கார் சொந்தக்காரர்களுக்கு காரை வெளியே எடுக்கும்போது ஆயில், வாட்டர் லெவல் பார்க்க வேண்டும் என்ற நினைவே வராது.

கார் பஞ்சராகிவிட்டால் ஸ்டெப்னியைக் கொண்டு டயரை மாற்ற 66% பேருக்குத் தெரியாது.

காரில் காற்று குறைந்தால் காற்று நிரப்ப 30% பேருக்குத் தெரியாது.

காரில் வைப்பர் வேலை செய்யாவிட்டால் அதைப் பழுது நீக்க 50% பேருக்குத் தெரியாது.

நல்ல வேளை, காரை பாதுகாப்பாக ஓட்ட, சிக்னல் போட, ரிவர்ஸ் எடுக்க, ஓவர்டேக் செய்ய, ஆஃப் கிளட்சில் ஓட்ட எத்தனை பேருக்குத் தெரியும் என்று ஆய்வு செய்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

இனி உங்கக் காரை தினமும் குளிப்பாட்டுவீர்களா, அல்லது குறைந்தபட்சம் அதன் முகத்தையும் வயிற்றையுமாவது சுத்தம் செய்வீர்களா?

No comments: