Monday, April 25, 2011

கேரள முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம்.


பூச்சிக் கொல்லி மருந்தான என்டோசல்பானை தடை செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், முந்திரி காடுகளில் விவசாய பயிர்களை தாக்கி வந்த பூச்சி மற்றும் புழுக்களை அழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, வானில் இருந்தபடியே என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

இதனால், நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என, பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாநில அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இப்பூச்சிக்கொல்லி மருந்தை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டுமென, கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரி வருகின்றன. இந்நிலையில், இம்மருந்து குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென, பிரதமர், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர் அச்சுதானந்தன், "இப்பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் 11 ஊராட்சிகளிலும், தென் பகுதியில் உள்ள கர்நாடகாவில், 94 கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளார். அவர் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்' என்றார்.

பாதிப்பு நிகழ்ந்த தினமான இன்று காலை, மாநில தலைநகரில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், காலை 10 மணி முதல், மாலை 5.30 மணி வரை, ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, மாநில அமைச்சர் விஜயகுமார் தெரிவித்தார். இதில் அரசியல் கட்சி வேறுபாடின்றி அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.

No comments: