
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டி அமைப்பு குழு தலைவராக ஒலிம்பிக் இந்திய சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டு இருந்தார். போட்டிக்கான ஏற்பாடு களை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் ரூ.8 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் ஊழல் நடந்து இருப்பது உறுதியாக தெரிந்தது. இதை தொடர்ந்து சில அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஊழலில் போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடிக்கும் முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. போட்டிக்கு தேவையான பொருட்களை ஒப்பந்தம் மூலம் அதிக விலை கொடுத்து வாங்கியது மற்றும் வாடகைக்கு எடுத்ததில் அவர் முறைகேடு செய்து இருந்தார்.
மேலும் காமன்வெல்த் ஜோதி ஓட்டம் லண்டனில் நடந்த போது அதற்கான ஏற்பாடுகளை செய்ததிலும் அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தார். இதை கண்டு பிடித்த சி.பி.ஐ. அவரிடம் ஏற்கனவே 3 முறை விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்தது. லண்டன் காமன்வெல்த் ஜோதி ஓட்டத்தின் போது அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது, ஒளிபரப்பு செய்வது மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்யும் பணிகள் ஏ.எம்.பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.
வழக்கத்தை விட இந்த நிறுவனத்துக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதுபற்றி விசாரிப்ப தற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் லண்டன் சென்று இருந்தனர். இந்த நிறுவனத்தின் அதிபர் ஆஷிஸ்பட் டேலிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் ஊழல் நடந்ததை ஒப்புக் கொண்டார். அந்த அதிகாரிகள் இருவரும் டெல்லி திரும்பினார்கள்.
இதையடுத்து சுரேஷ் கல்மாடியை மீண்டும் விசாரணக்கு வருமாறு அழைத்தனர். அதை ஏற்று சுரேஷ் கல்மாடி இன்று டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 1 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்தனர். இன்று மாலை அல்லது நாளை கல்மாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் அதன் பிறகு ஜெயிலில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்மாடி கைது தொடர்பான விவரங்களை இன்று மாலை 4 மணிக்கு விரிவாக தெரிவிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment