Monday, April 25, 2011

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி.

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி: பல்லடம் பகுதியில் பரபரப்பு

பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் போது பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் குட்டையில் இடி விழுந்ததாகவும், குட்டையில் இருந்து தொடர்ந்து நீர்க்குமிழிகள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் தகவல் பரவியது. பொது மக்கள் வந்து ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

சித்தம்பலம் குட்டையில் நீர்க்குமிழிகள் வருவது குறித்து பஞ்சாயத்து துணை தலைவர் வேணுகோபாலிடம் கேட்டபோது கடந்த 10 ஆண்டாக சித்தம்பலம் குட்டையில் தண்ணீர் இல்லை. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது சித்தம்பலம் குட்டை அருகே இடி விழுந்ததுள்ளது. குட்டைக்குள் விழுந்ததாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குட்டை தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் மழை நீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டாக குட்டையில் தண்ணீர் இல்லாததால் பூமியில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பிளவுகளில் தண்ணீர் இறங்குவதால் குமிழிகள் வெளிவரலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.

இருப்பினும் பொது மக்கள் இடி விழுந்ததால் நீர்க்குமிழி வருகிறது என்று கூறி பார்த்து செல்கின்றனர்.

No comments: