Monday, April 25, 2011

ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கருத்துக் கணிப்பில் தகவல்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பெரும்பான்மை மக்கள் கருதுவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இணைந்து அண்மையில் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தின.
கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை நடந்த இந்தக் கருத்துக் கணிப்பில் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,224 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடு குறித்து 45 சதவீதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதத்தைவிட குறைவாகும்.

பொருளாதார நெருக்கடிகளை அவர் கையாளுவது குறித்து 57 சதவீதம் பேரும், பட்ஜெட் பற்றாக்குறையை அவர் கையாண்டது குறித்து கிட்டத்தட்ட அதே அளவினரும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

எனினும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை ரத்து செய்யும் ஒபாமாவின் திட்டத்துக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

எந்த வகையில் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்கிற கேள்விக்கு ராணுவச் செலவுகளைக் குறைப்பதற்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சமூகப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்கலாம் என 17 சதவீதம் பேரும், மருத்துவத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கலாம் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 70 சதவீதம் அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். லிபியா மீதான தாக்குதலுக்கும் பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

No comments: