Monday, April 25, 2011

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்கு அமைச்சர் எதிர்ப்பு.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 14, 25 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபிதா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறையே தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர்,

தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மூலமாக தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே வழக்கமான நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

தொடரும் மோதல்:


நடத்தை நெறிமுறைகளால் மக்கள் நலப் பணிகள் தடைபடுவதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நலத் திட்டப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிடவும், அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், பள்ளித் தேர்வு முடிவு தேதியை தங்களை கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறை தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்ற அந்தத் துறை அமைச்சரின் திடீர் புகாரால் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: