Sunday, April 24, 2011

கன்னிமாரா நூலகத்தில் அரிய புத்தகங்கள் டிஜிட்டல் மயம்.



சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய நூல்கள் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்துப் பார்வையிடுகிறார் பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அரிய, பழமையான புத்தகங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் டி.சபிதா கூறினார்.

உலகப் புத்தக தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் அரிய, பழமையான புத்தகங்களின் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. கி.பி. 1608-ல் பதிப்பிக்கப்பட்ட பைபிள் முதல் நூறாண்டுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட நூல் வரை ஏறத்தாழ 400 புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து சபிதா கூறியது:

கன்னிமாரா நூலகத்தில் 1.25 லட்சம் அரிய நூல்கள் உள்ளன. இந்த நூல்களை குறிப்பெடுக்கப் பயன்படுத்தும்போது சேதமடைய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், நூலகத்துக்கு வருவோருக்கும் அதிக நேரம் செலவாகிறது. இதைத் தவிர்ப்பதற்காக அரிய நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உதவியுடன் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 ஆயிரம் நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள புத்தகங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையத்தில் டிஜிட்டல் பதிப்புகள் வெளியிடப்படும்.

எஸ்.எம்.எஸ். சேவை அறிமுகம்: கன்னிமாரா நூலக வாசகர்களுக்காக புதிய எஸ்.எம்.எஸ். சேவையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, கன்னிமாரா நூலக இணையதளத்தில் தங்களது செல்போன் எண்களைப் பதிவு செய்த பிறகு, எஸ்.எம்.எஸ். மூலமே புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்கும் தேதியை நீட்டிக்கலாம்.

இதன் மூலம் நூலகத்தின் பணிச் சுமையைக் குறைக்கலாம் என்றார் அவர்.

No comments: