Sunday, April 24, 2011

மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை.

மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை: 2 நாட்களாக நிற்க வைத்து சித்ரவதை

ஒரிசா மாநிலத்தில் உள்ள குக்கிராமமான சுனா முண்டாவில் உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பரீட்சை நடந்தபோது சுனா முண்டா மற்றும் பல்சா குதார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 13 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவிகளுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர் டாக்டர்களிடம் அழைத்துச்சென்று மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவர்கள் குணமடையாததால் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அவர் மாணவிகளுக்கு சிலர் பில்லி சூனியம் வைத்து இருப்பதால் பேய் பிடித்து இருப்பதாகவும் மந்திர கட்டில் மூலம் யார் சூனியம் வைத்தார்கள் என்பதை கண்டுபிடித்து விடுவதாகவும் கூறினார்.

இதையடுத்து கட்டாக் நகரில் இருந்து அந்த மந்திரவாதி ஒரு கட்டில் வாங்கி வந்து இதுதான் மந்திரகட்டில் என்று கூறி மாணவிகளின் பெற்றோரை நம்ப வைத்தார். 13 மாணவிகளையும் வரவழைத்து மந்திரவாதி பூஜை செய்தார். டாக்டர்களால் முடியாததை மந்திரவாதி செய்து விடுவார் என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

மாணவிகளுக்கு உடல்நலம் குணமாகவில்லை. மேலும் அதே ஊரைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் மீது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள்தான் பில்லி சூனியம் வைத்து இருக்கலாம் என்று கருதி கிராமமக்கள் திரண்டு சென்றனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த மதுசூதன் ரானா, அவரது மனைவி நிர்மலா, மகள் சந்தியா, ஈஸ்வர் அவரது மனைவி தலிம்பா, மகள்கள் கமலா, ஹேமலதா, துகி ஆகிய 8 பேரை பிடித்து வந்து ஊருக்கு நடுவில் நிற்க வைத்தனர். அவர்களை பன்றி மற்றும் மனித கழிவுகளை சாப்பிட வைத்து சித்ரவதை செய்தனர்.

2 நாட்களாக அங்கேயே நிற்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள். இதன்மூலம் அவர்கள் வைத்த பில்லிசூனியத்தின் சக்தி குறைந்து விடும் என்று நம்பினார்கள்.

கிராம மக்களிடம் இருந்து தப்பிய ரானா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கிராமமக்களிடம் இருந்து 2 குடும்பத்தினரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: