Sunday, April 24, 2011

எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்துக்கு உலகளவில் தடை வருமா?


உடல் நலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்க ஜெனீவாவி்ல் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி பன்னாட்டு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

ஸ்டாக்ஹோம் கன்வென்சன் என்று அழைக்கப்படும் இக் கூட்டத்தில் இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டால், உலகம் முழுவதும் இந்த மருந்து உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் இந்த மருந்துக்கு தடை விதிப்பதை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மிகச் சிறந்த பூச்சிக் கொல்லியான இந்த மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டால் தங்கள் நாட்டு விவசாயமே அடியோடு பாதிக்கப்படும் என இந்த நாடுகள் கூறுகின்றன.

இதனால் இந்த மருந்துக்குத் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. உலகில் 70 சதவீத எண்டோசல்பான் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை பிரேசிலும் இஸ்ரேலும் தயாரிக்கின்றன.

இந் நிலையில் இந்த மருந்தை ஒழித்துக் கட்டிவிட்டு, தங்கள் நாட்டு விலை உயர்ந்த மருந்துகளை வளரும் நாடுகளின் தலையில் கட்ட ஐரோப்பிய நாடுகள் முயல்வதாகவும், இதனால் தான் இந்த மருத்துக்கு தடை விதிக்க முயல்வதாகவும் இந்திய எண்டோசல்பான் மருந்து உற்பத்தியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

எண்டோசல்பான் மருந்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான். ஆனால், அந்த நிறுவனம் இப்போது இந்த மருந்தை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. காரணம், அந்த நிறுவனத்தைவிட விலை குறைவாக இந்தியா இந்த மருந்தைத் தயாரிப்பது தான். இப்போது அந்த நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதை வளரும் நாடுகள் மீது திணிக்கவே, எண்டோசல்பான் மீதான தடையை அந்த நிறுவனமே ஆதரித்து வருகிறது என்று இந்திய பூச்சி மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் தாவே கூறியுள்ளார்.

ஒரு லிட்டர் எண்டோசல்பானில் விலை ரூ. 286 ஆகும். ஆனால், இதற்குப் பதிலாக ஐரோப்பிய நிறுவனங்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தின் விலை லிட்டர் ரூ. 2,000ல் இருந்து ரூ. 13,000 வரை இருக்கும் என்கிறார்கள்.

தடை விதிக்க கேரள முதல்வர் கோரிக்கை:

இந் நிலையில் எண்டோசல்பானுக்கு தடை விதிப்பதில் பிரதமர் மன்மோகன் சிங் மெத்தனமாக செயல்படுவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், எண்டோசல்பான் பூச்சி மருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கண்களைக் மூடிக்கொண்டுள்ளது. அந்த மருந்துக்கு தடை விதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டும்.

எண்டோசல்பானுக்கு தடை விதிக்க கூடுதல் ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் கருத்துக்களையே பிரதமரும் தெரிவித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர் மட்டுமல்ல மக்களுக்கும் எதிரானவர்.

இந்த பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதில், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏராளமானோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் 11 பஞ்சாயத்து பகுதிகளும், கர்நாடகத்தில் 96 கிராமங்களும் இந்த பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு பூச்சி மருந்து நிறுவனத்துக்கு குரல் கொடுக்காமல் உடனடியாக மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.

எண்டோசல்பானுக்கு தடை விதிக்குமாறு கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

thatstamil.oneindia.in

No comments: