Sunday, April 24, 2011

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரத்தில் காய்கள்.


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருக்கோவில் அமைந்துள்ள இடத்துக்கு சிவகாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் திருநாமம்-ஏகாம்பரநாதர், இறைவியின் திருநாமம்-ஏலவார்குழலி.

ஏகம் என்றால் ஒன்றானவன். தன்னிகரற்ற தலைவன். ஆம்பரம் என்றால் மாமரம். ஒற்றை மாவின் மூலத்திலிருந்து தோன்றியவன் என்பதால் இப்பெயர் வழங்கலாயிற்று.

இக்கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேலானதாகும். இந்த மரத்தின் 4 கிளைகளிலும் 4 விதமான ருசியும் (இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு), 4 உருவ வடிவங்களும் கொண்ட மாங்கனிகள் கிடைத்து வந்தன.

இந்த மரத்தின் அடியில்தான் காமாட்சியம்மன் தவம் செய்து, மண்ணால் சிவலிங்கத்தை செய்து, அவரையே திருமணம் செய்தார் என்பது ஐதீகம். இதனால் இந்த புண்ணிய மாமரம் அருகே பல ஆண்டுகளாக பொதுமக்கள் தங்களது வீட்டு திருமணங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மாமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப் போனது. அரசு உத்தரவின்படி வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், இக்கோவிலில் முகாமிட்டு பட்டுப் போன மாமரத்திற்கு உயிர் கொடுக்க கடும் முயற்சி செய்தனர்.

கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இதற்கான முயற்சிகள் தொடங்கின. அந்த முயற்சி வெற்றியடைந்து, அதே மரத்தினுடைய உயிரணுக்கள் மூலம் மாமரம் உருவாக்கப்பட்டது. அந்த மரம் தற்போது பச்சைப் பசேல் என மீண்டும் வளர்ந்து புத்துயிர் பெற்று காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இந்த மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கின. தற்போது மாங்காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. ஒரு சில காய்கள் கனியத் தொடங்கியுள்ளது.

3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த அதிசய மாமரத்தில் பல்வேறு ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் காய்க்கத் தொடங்கியுள்ள மாங்கனிகளை பார்ப்பதற்காக இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் திரளான பக்தர்கள் இக் கோவிலுக்கு வந்திருந்து, ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலியையும் தரிசித்து, அதிசய மாமரத்தை கண்டு களித்து செல்கின்றனர்.

1 comment:

Unknown said...

Oh sweet news, thankyou. I got dharanam before 10 years. At that time it was dead. This news makes me so happy.
Aum namashivAya