Monday, August 1, 2011

நோய்களை தீர்க்கும் யோகா, தாளாசனம், கோணாசனம்.

நோய்களை தீர்க்கும் யோகா.
நோய்களை தீர்க்கும் யோகா

யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது. அதற்கெல்லாம் நேரம் ஏது என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.

எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும். நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம்.

காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது.

வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும். நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது.

ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, கருப்பை பிரச்சினை, மூட்டு வலி, கழுத்து வலி என பல நோய்களுக்கும் யோகாவின் மூலமாக தீர்வு காணலாம். யோகாவைச் செய்ய வயது வித்தியாசமோ, உடல் எடையோ, பாலினமோ எந்த தடையும் இல்லை. எந்த வயதினரும், எவ்வளவு எடை கொண்டவர்களும் இதனை செய்து பயன்பெறலாம்.


தாளாசனம்.
தாளாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கவும். உள்ளங்கைகள் ஒன்றுக்கொன்று பார்த்திருக்கட்டும். இரண்டு குதிகால்களும் சற்று உயரும் வகையில், எக்கிப்பாருங்கள். இப்பொழுது உங்கள் கால் விரல் அடிச்சதையில், ஒட்டுமொத்த உடம்பும் இருந்கும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி நின்று, பின் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

பாதத்தில் உள்ள குதிகாலில் இருந்து தலையிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி வரை, எல்லா நரம்புகளும் ஒரு முறை இழுத்து விடப்படுவதால், ஒட்டுமொத்த உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பாதம், கால், தொடை, தசைகள் வலுப்பெறுவதால், உடம்பு, ' சும்மா ' பனை மரம் போல் உறுதியாக இருக்கும்.


கோணாசனம்.
கோணாசனம்

செய்முறை:

முதலில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடிக்கு அகற்றி வைக்கவும். பின்னர் கைகளைப் தலைக்கு மேலே தூக்கிக் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடலை வளைக்காமல் சாய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். இவ்வாறு 3 முறை செய்யலாம். பின் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
Justify Full
பலன்கள்:

விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பில் சதை போடாமல் தடுக்கலாம்

No comments: