இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கிறிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோகேம் விளையாடுவதில் இவருக்கு அலாதி பிரியம். அதில் ஈடுபட்டால் தன்னையே மறந்து விடுவார். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவார்.
அது போன்று சமீபத்தில் வெளியான மராத்தான் விளையாட்டு சம்பந்தப்பட்ட “வீடியோகேம்” விளையாடினார். அதை தொடர்ந்து விளையாடினார். பரபரப்பும், “திரில்”லும் தொற்றிக் கொள்ளவே 12 மணி நேரம் இடைவிடாமல் விளையாடினார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி இறந்தார். தொடர்ந்து விளையாடியதால் மூளையின் செயல்பாடு அதில் தீவிரமாக இருந்ததால் நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த வீடியோ கேம் தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை இறந்த கிறிஷின் தந்தை டேவிட் மறுத்துள்ளார். வீடியோ கேம் நிறுவனத்தை நான் குற்றம் சுமத்த மாட்டேன். விளையாட்டை ரசிக்காமல் தீவிரமாக அதில் தொடர்ந்து ஈடுபடுவது விளையாடுபவர்கள் செய்யும் தவறாகும். எனது மகன் போன்று இதை தொடர்ந்து விளையாடினால் அது ஆபத்தில் தான் முடியும் என்றார்.
வீடியோகேம் தயாரிப்பு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற விளையாட்டின் மூலம் கல்வி அறிவை பரப்பி வருகிறோம். ஆனால் விளையாடுபவர்கள் இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மூழ்கி விடக்கூடாது என விளக்கம் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment