Monday, August 1, 2011

யோக்கியர்கள் போல எதிர்க்கட்சிகள் பேசுவது சரியல்லை - பிரதமர்.



நாடாளுமன்றத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும், எந்தவிதமான விவாதத்தையும் சந்திக்க நாங்கள் தயார். எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை எழுப்பினால் அவர்களது ஊழல்களை நாங்கள் எழுப்புவோம் அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்று அதிரடியாகப் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்

வழக்கமாக மென்மையாக பட்டும் படாமல், புரியாதது போல பேசுவார் ம்ன்மோகன் சிங். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் அதிரடி வியூகத்திற்கு பதிலடியாக பேசியுள்ளார் பிரதமர்.

எதிர்க்கட்சிகள் வகுத்து வரும் வியூகத்தை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்று செய்தியாளர்கள் மன்மோகன் சிங்கிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,

ஊழலைப் பற்றி அவர்கள் பேசட்டும். பதிலுக்கு அவர்களுடைய ஊழல்களைப் பற்றி நாங்களும் பதிலுக்குப் பேசிவிட்டுப் போகிறோம். எங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை விட எதிர்க்கட்சிகள் மீதுதான் நிறைய ஊழல் மண்டிக் கிடக்கிறது. அவர்கள் மட்டும் என்ன ரொம்ப யோக்கியமா?.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நாடாளுமன்றத்தில் அதுகுறித்துப் பேசக்கூடாது. இது குறித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கட்டும், நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது என்றார் பிரதமர்.

இதற்கிடையே, பிரதமர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றம்தான் எல்லா அமைப்புகளையும்விட உயர்வானது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அங்கே பேசாமல் இருக்க முடியாது. அரசின் ஊழல்களைப் பற்றிப் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு யாரும் வாய்பூட்டு போட முடியாது.

அரசின் எல்லா ஊழல்கள் குறித்தும் கட்டாயம் பேசுவோம், ஏன் என்றால் இந்த ஊழல்கள் மீது அரசு தானாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், பொதுநல வழக்கு தொடுத்த மனுதாரர்கள் ஆகியோரின் மனம் தளராத முயற்சிகளுக்குப் பிறகே ஊழல்களை விசாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

கடந்த தொடர் போல ஸ்தம்பிக்குமா?

கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட அலுவல் நடக்கவில்லை. காரணம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா பதவி விலகக் கோரி அந்தத் தொடரையை முடக்கிப் போட்டன எதிர்க்கட்சிகள். இந்த நிலையில் இந்தக் கூட்டத் தொடராவது முழுமையாக நடக்குமா என்ற கவலையில் அரசுத் தரப்பு உள்ளது.

No comments: