தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான திறப்பு விழா வித்தியாசமாக நடத்தப்பட்டது.
புதிய மாணவ - மாணவிகளை சீனியர் மாணவர்கள் வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சீனியர் மாணவர்கள் “நாங்க ராக்கிங் செய்யமாட்டோம்” நண்பர்களாக இருப்போம்” என்று கூறி புதிய மாணவர்களை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கனகசபை தலைமையில் “ராக்கிங்” செய்யமாட்டோம் என மூத்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தமாட்டோம் என முதல்வர் உறுதிமொழியை படிக்க மூத்த மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி செய்தனர்.
பின்னர் முதல்வர் கனகசபை மாணவர்கள் இடையே பேசியதாவது:-
ராக்கிங்கை தடுக்க துறை வாரியாக கண்காணிக்கப்படுகிறது. போராசிரியர், வார்டன், தலைமை வார்டன் மாணவர்களை தினமும் கண்காணிப்பார்கள். விடுதியில் திடீர் சோதனை நடத்துவார்கள். மேலும் மாணவ- மாணவிகள் விடுதியில் பேராசிரியர் ஒருவர் தங்கி இருப்பார்.
சுழற்சி முறையில் மாறிமாறி ஆண் - பெண் பேராசிரியர்கள் தங்கி ராக்கிங் நடைபெறுகிறதா? என்பதை ரகசியமாக கண்காணிப்பார்கள். இதுதவிர என்னுடைய ஆபீஸ் முன்பு புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்படும். அதில் ராக்கிங் பற்றி புகார் தெரிவிக்கலாம்.
ஒருவேளை ராக்கிங் செய்வது தெரியவந்தால் அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான அவசியம் இருக்காது என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய மாணவ- மாணவிகளை பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றாக வந்து வகுப்பில் விட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுந்தரம் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment