Monday, August 1, 2011

டீசல், கியாஸ் விலை உயர்வை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்யும் : பிரணாப்முகர்ஜி தகவல்.



பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. உற்பத்தி செலவை விட இவற்றின் விலை குறைவாக இருந்ததால் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

இதனால் எரிபொருள் விலை நிர்ணய உரிமையை தங்களுக்கு தரவேண்டும் என்று கோரின. இதையடுத்து பெட்ரோல் நிர்ணய உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

உடனடியாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. எனினும் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டம் குறையவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டியுள்ளது.

எனவே டீசல், சமையல் கியாஸ் விலை நிர்ணய உரிமையையும் எண்ணை நிறுவனங்களுக்கே கொடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கூறியதாவது:-

பெட்ரோலுக்கான விலைக் கட்டுப்பாடு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது. அதேபோல டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றுக்கான விலைக் கட்டுப்பாட்டையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளோம். இவற்றின் விலைகளை எண்ணை நிறுவனங்களே நிர்ணயிக்கும்.

அதேநேரத்தில் ஏழைகளுக்கும், மின்சார வசதி இல்லாமல் மண்எண்ணை விளக்கை பயன்படுத்துவோருக்கும் மானிய விலையில் தொடர்ந்து மண்எண்ணை அளிக்கப்படும்.

பணவீக்க விகிதம் தற்போது மிகவும் அதிகமாக (9.44 சதவீதம்) உள்ளது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு அல்ல. பணவீக்கத்தை 5 முதல் 5.5 சதவீதம் அளவுக்கு குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நடப்பு நிதியாண்டின் முடிவில் பணவீக்க விகிதம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெட்ரோலை போல இனி டீசல், கியாஸ் விலையை எண்ணை நிறுவனங்களே உயர்த்தும். இதனால் அவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மண்எண்ணை, சமையல், கியாஸ், உரம் ஆகியவற்றிற்கான மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு, அசாம், மராட்டியம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், ஒரிசா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: