Sunday, July 31, 2011

கயானா நாட்டில் தரையில் மோதி 2 ஆக பிளந்த விமானம்.

கயானா நாட்டில் விமானம் தரையில் மோதி 2 ஆக பிளந்தது: 163 பயணிகள் காயத்துடன் தப்பினர்

அமெரிக்கா நியூயார்க்கில் இருந்து கரீபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள ஜெட்டிஜகன் விமான நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தது. அதில் 157 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.

நேற்று நள்ளிரவு 1.32 மணியளவில் அந்த விமானம் ஜெட்டிஜகன் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது ஈரப்பதமான தட்பவெட்ப நிலை நிலவியது.

இதனால் நிலை தடுமாறிய விமானம் சுமார் 7,400 அடி நீள ஓடுதளத்தில் குட்டிகரணம் அடித்தபடி சென்றது. இறுதியில் 2 ஆக பிளந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விமானத்தின் கதவை திறந்தபடி முண்டியடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகளும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் விமானத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் பிளாடெல்பியாவை சேர்ந்த கீதா ராம்சிங் (41) உள்பட பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் கால் எலும்பு முறிந்தது. ஆனால் உயிர் சேதம் ஏதுமில்லை.

இந்த விமானம் 2 ஆக பிளந்து நின்ற இடம் ஓடுதளத்தின் இறுதி பகுதியாகும். அதன் அருகே 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு உள்ளது. அதில் விழுந்து இருந்தால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை என்று கயானாவின் அதிபர் பாரத் ஜக்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் கயானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: