Sunday, July 31, 2011

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகம், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் ஆகியவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மோகன்ராஜ், நீலன் அரசு, உதயகுமார், வேலம்மாள் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருப்பது சரியான நடவடிக்கை. தரமான கல்வியை தரவேண்டும் என்பதற்காக பழைய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்க்கத்தக்கது.

இவற்றை வரவேற்றும் தி.மு.க. மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதை கண்டித்தும், நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள்- ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-

தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக முதல் - அமைச்சர் ஜெயலலிதா, எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளை சமாளிக்க கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டியது இல்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி கல்வி கட்டணம் ஏற்க கூடியது அல்ல. முத்தரப்பு குழு அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் இணைப்பு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: