Sunday, July 31, 2011

போலீஸ் வேனில், கலங்கிய கண்களுடன் வீரபாண்டியார் !



தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வருவதாக நினைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக வந்திருந்தபோது அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சிறைக்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றப்பட்டபோது இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கியதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மூன்றாவது நாளாக நேற்று காலை, 7.53 மணிக்கு, வீரபாண்டியார் வந்திருந்தார். அவருடன், உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோரும் வந்தனர்.

வெளியே நின்றிருந்த தொண்டர்களிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு சரியாக 7.57 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார் முன்னாள் அமைச்சர். உள்ளே காத்திருந்த இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர், அமைச்சரிடம் வழக்கு நிபந்தனை பைலில் கையெழுத்து வாங்கினர்.

கையெழுத்து போட்டுவிட்டு சாவகாசமாக துணை கமிஷனர் சத்யபிரியாவின் அலுவலகத்துக்குள் நுழைந்தார் வீரபாண்டியார். அடுத்த நிமிடமே, அதிரடிப்படை வாகனம் ஒன்று, அலுவலகத்தின் முன் பகுதியில் சர்ரென்று வந்து நின்றது.

இந்த நேரத்தில்தான் துணை கமிஷனர் சத்யபிரியா வாயைத் திறந்தார். தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை, மிரட்டி வாங்கிய வழக்கில் கைது செய்யப்படுவதாக வீரபாண்டியாரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த வீரபாண்டியார் சில விநாடிகள் எதுவும் பேசாமல் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அதன்பின், தன்னை இப்படிக் கைது செய்ய முடியாது என்று போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் முன்னாள் அமைச்சர் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால், அவர் கூறியதை யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரை வேனில் ஏற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வீரபாண்டியார் திகைத்தபடி நின்றிருந்தார்.

சில நிமிடங்களில் அவர், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். வேன் நகரத் தொடங்கியபோது, அங்கு வெளியே காத்திருந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், மாநகர பொருளாளர் அன்வர் உட்பட சிலர் வீதியில் உட்கார்ந்து மறித்தனர்.

அவர்களுடன் போலீஸ் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டது.

அவர்களை கைகளிலும் கால்களிலும் பிடித்து, அப்படியே தூக்கி வீதியிலிருந்து அகற்றினர் போலீஸார். அதையடுத்து லேசான தடியடி பிரயோகமும் நடத்தினர்.

ஆட்கள் அகற்றப்பட்டதையடுத்து, வீரபாண்டியாரை ஏற்றிய வேன் உட்பட ஏழு வாகனங்கள் வெளியில் வந்தன. இந்த வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கோர்ட்வரை, பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீசார் தயார் நிலையில் நின்றிருந்தனர். வீரபாண்டியாரின் வண்டி கிளம்பியதும் வாக்கி டாக்கி மூலம் அவர்கள் அனைவருக்கும் தகவல் பறந்தது.

இதனால், இடையே எங்கும் நிறுத்தப்படாமல் அனைத்து போலீஸ் வாகனங்களும் அதி வேகத்தில் பறந்தன. சினிமாவில் வரும் சேஸிங் காட்சிபோல வரிசையாகச் சென்ற வாகனங்கள், சேலம் கோர்ட் வளாகத்துக்கு அருகிலுள்ள நீதிபதியின் வீட்டு வாயிலில் போய் நின்றன.

வீட்டிலிருந்த நீதிபதி ஸ்ரீவித்யா இவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.

வழக்கமாக கிரிமினல் குற்றவாளிகளை ஆஜராக்கும் பாணியில் வீரபாண்டியாரை போலீஸார் இரு கைகளிலும் பற்றியபடி நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்தினர். குற்றவாளிகள் தப்பியோடி விடாதபடி அவர்களது இரு கைகளையும் போலீஸார் பற்றிக் கொள்வது வழக்கம்.

வழக்கின் விபரங்களை சரிபார்த்த நீதிபதி ஸ்ரீவித்யா, வீரபாண்டியாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் தலைகுனிந்த நிலையில் நின்றிருந்தார்.

முன்னாள் அமைச்சர் உட்பட ஐந்து பேர் மீது, சட்ட விரோதமாக நான்கு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுதல், அத்து மீறி உள்ளே நுழைதல், அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுதல், அத்துமீறுதல், மிரட்டி பணம் பறித்தல், நிலத்தை அபகரித்தல், மிரட்டல் மூலம் அபகரித்துக் கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது போலீஸ்.

இந்த ஐந்து பேரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மட்டும் கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தனர் போலீஸார். அதையடுத்து அவரை வெளியே அழைத்துச் செல்லலாம் என சைகை செய்தார் நீதிபதி ஸ்ரீவித்யா.

உடனடியாக அவரை கைகளைப் பற்றி இழுத்த நிலையிலேயே வெளியே கொண்டுவந்த போலீஸார், கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக மீண்டும் வேனில் ஏற்றினார்கள். வேனில் ஏற்றப்படும்போது தி.மு.க.வின் இந்த முன்னாள் அமைச்சர் கண் கலங்கினார்.

அவர் கண் கலங்கியதையும், அழுதுகொண்டே வேனில் ஏறியதையும் போலீஸார் எவரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்று காலை 11.35 மணியளவில், கோவை மத்திய சிறை வளாகத்துக்குள் வீரபாண்டி ஆறுமுகம் வந்த வாகனம் நுழைந்தது.

அப்போது, சிறை வளாகத்துக்கு முன் கூடியிருந்த தி.மு.க.,வினர், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரையும், போலீசார் அப்புறப்படுத்தினர்.

கோவை சிறையில் வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டார்.

viruvirupu.com

No comments: