Sunday, July 31, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் ; அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்.



சட்டசபை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல் - அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்; என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அ.தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் விவரம் வருமாறு:-

* இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.

இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும், மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

No comments: