Sunday, July 31, 2011

மாணவன் உயிரை குடித்த சமச்சீர் கல்வி போராட்டம் .

சமச்சீர் கல்வி போராட்டம் மாணவன் உயிரை குடித்தது;     வீட்டுக்கு திரும்பும் வழியில் பஸ் கவிழ்ந்து விபத்து

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி கிளரியம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் விஜய் (வயது 12). விஜய் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க.வினர் பள்ளி மாணவர்களை அழைத்து மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிக்கு சென்ற மாணவன் விஜய் மற்றும் மாணவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தி.மு.க.வினர் கூறினர். இதனால் அந்த வழியாக வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சில் விஜய் ஏறினான். அவனுடன் பள்ளி மாணவ- மாணவிகள் சிலரும் அந்த பஸ்சில் ஏறினர்.

பஸ் கிளரியம் ரெயில்வேகேட் அருகே சென்றபோது எதிரே தஞ்சையில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு திருவாரூர் நோக்கி வேகமாக ஒரு லாரி வந்தது. லாரியை பஸ் கடக்க முயன்றபோது, லாரி பஸ் மீது மோதியது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, உடனே நிலை தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவன் விஜய் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், அதே பஸ்சில் பயணம் செய்த சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திவ்யா (10), தமிழரசி (14), பிரவீனா (16), சூர்யா (15), செந்தமிழ்ச்செல்வி (14), வீரமணி (15), கவிதா (18), வேதவள்ளி (25) உள்ளிட்ட 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மாணவ- மாணவிகளை ஆம்புலன்சில் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தின் காரணமாக, திருவாரூர் - தஞ்சை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய 2 வாகனங்கள் மீட்கப்பட்ட பின்னர், போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவனின் சாவுக்கு காரணமான தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: