
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் சத்தியநாராயணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரிகா (வயது24). இவர் அதே மாவட்டம் பொன்னேகால் பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி சாரிகா கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது சாரிகா மதியம் கல்லூரியில் இருந்து வெளியில் சென்றார். அதன் பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே சாரிகாவின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினார்கள். அப்போது கல்லூரி ஊழியர் ராஜுவிடம் இருந்து அவருக்கு நிறைய எஸ்.எம்.எஸ். வந்திருந்தது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் மாணவி சாரிகாவை கொலை செய்ததாக கூறினார். ராஜு மாணவி சாரிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை சாரிகா ஏற்கவில்லை.
இதற்கிடையே சாரிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு, கல்லூரிக்கு வந்த மாணவி சாரிகாவிடம் தகராறு செய்துள்ளார். அவர்களிடையே மோதல் வலுத்ததால் ஆத்திரமடைந்த ராஜு துப்பட்டாவால் சாரிகா கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் பிணத்தை கல்லூரி வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜுவை போலீசார் கைது செய்தனர். கல்லூரி வளாகத்தில் புதைக்கப்பட்ட மாணவி சாரிகா பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிணத்துடன் பெற்றோரும் உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாணவிகளின் உறவினர்கள் சிலர் கல்லூரிக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment