Monday, May 9, 2011

ரத்து செய்யப்படும் டிக்கெட்டால் தென்மாவட்ட ரெயில்களில் தினமும் ரூ.1 லட்சம் வருமானம்.

ரெயில்களில் அலைமோதும் கூட்டம்: ரத்து செய்யப்படும் டிக்கெட்டால் லட்சக்கணக்கில் வருமானம்; தென்மாவட்ட ரெயில்களில் தினமும் ரூ.1 லட்சம் கிடைக்கிறது

தொலைதூரங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் ரெயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குடும்பத்தோடு செல்பவர்கள் பயண திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். அப்படி இருந்தும் கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை.

தென் மாவட்டங்களுக்கு 25க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை முன்பதிவு டிக்கெட்டுகள் இல்லை. ஒவ்வொரு ரெயிலிலும் அதிகபட்சமாக 300 காத்திருப்போர் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

டிக்கெட்டுகள் ரத்தானால் நமக்கு வாய்ப்பு கிடைக்குமே என்ற நம்பிக்கையில்தான் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வாங்குகிறார்கள். பெரும்பாலான நாட்களில் அதிக அளவில் டிக்கெட்டுகள் ரத்தாவதில்லை. வேறு வழியின்றி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டு பஸ்களில் செல்கிறார்கள்.

குறைந்த பட்சம் ஒவ்வொரு ரெயிலிலும் 200 வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் தினமும் ரத்து செய்யப்படுகிறது. ஒரு டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.20 கட்டணமா வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் தென்மாவட்ட ரெயில்கள் மூலம் தினமும் சராசரியாக ரூ.1 லட்சம் ரெயில்வேக்கு வருமானம் கிடைக்கிறது.

சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் தென்னக ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே, வட கிழக்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே உள்பட அனைத்து ரெயில்வே கோட்டங்களையும் கணக்கிட்டால் ரெயில்வே துறை ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகள் மூலம் மட்டுமே தினமும் பல லட்சங்களை வருமானமாக குவித்து வருகிறது.

1 comment:

yasaru said...

நிஜமாத்தான் சொல்றீயா......? இந்தியா முழுவதும் அப்போ எவ்ளோ வரும்?