
1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மும்பையில் இருந்த வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டான்.
அவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து கராச்சியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது. தாவூத் இப்ராகிம் அங்கிருந்தவாறே லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மூலம் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வந்தான். அவனை தங்களிடம் ஒப்படைக் குமாறு இந்தியா கூறியது.
ஆனால் பாகிஸ்தான் தாங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று கூறி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றது. இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராகிம் மற்றும் தீவிரவாதிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவிட்டான். அவன் சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமுடன் அவனது குடும்பத்தினரும் கராச்சியை காலி செய்து விட்டனர்.
இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மகன் மொயினுக்கும், பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளிளைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணத்தை வருகிற 28-ந் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தான். தன்னை இந்தியா தேடுவதால் தாவூத் இப்ராகிம் தனது மகன் திருமணம் நடைபெறும் இடத்தை ரகசியமாக வைத்து உள்ளான். 2 மாதத்துக்கு முன்பே திருமண தேதியை முடிவு செய்து விட்டான்.
இந்த நிலையில் பின்லேடனை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி கொன்று விட்டது. இதனால் பீதி அடைந்த தாவூத் இப்ராகிம் தனது மகன் திருமணத்தை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளான். என்றாலும் துபாயில் எங்கு நடைபெறும் என்பதையும் ரகசியமாக வைத்துள்ளான்.
கராச்சியில் தனது மகன் திருமணத்தை நடத்தினால்தான் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்து இருப்பது உலக நாடுகளுக்கு வெளிப் படையாக தெரிந்து விடும் என்பதால் தாவூத் இப்ராகிம் திருமண இடத்தை மாற்றிவிட்டான்.
திருமணத்துக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளான். இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தாவூத் இப்ராகிம் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. எனவே மகன் திருமணத்தில் தாவூத் இப்ராகிம் வெளிப்படையாக பங்கேற்பதும் அவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
1993-ம் ஆண்டு தலைமறைவுக்கு பின் தாவூத் இப்ராகிம் எந்த நிகழ்ச்சியிலும் வெளிப் படையாக பங்கேற்காமல் இருந்தான். எனவே மகன் திருமணத்தில் அவன் கலந்து கொண்டால் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவனை பிடிக்கவும் இந்தியா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment