Monday, May 9, 2011

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்.

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்

அன்னிய மண்ணில் 4 ஹெலிகாப்டர்களுடன் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அமெரிக்க படையினர் சாதித்துகாட்டிய இந்த துணிச்சல் வேறு எந்த நாட்டு ராணுவத்துக்கும் வருமா என்பது கேள்விக்குறியே!

அசகாய சூரர்களாக மாறி ஓசாமாவை வீழ்த்திய கமாண்டோ படையினரை அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தீவிரவாதத்தின் தலையை துண்டித்துவிட்டோம் என்று வர்ணித்துள்ளார்.

இதற்காக அமெரிக்காவுக்கே தேவைப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் அல்ல! 10 ஆண்டுகள்!! காலம் கடந்தாலும் பின்லேடனை பழி தீர்த்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை அமெரிக்கா துடைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

பின்லேடன் இருப்பிடத்தை மோப்பம் பிடித்தது முதல் அவனை சுட்டு வீழ்த்தியதை அதிபர் ஒபாமா நேரடி சாட்சியாக பார்த்தது வரையிலான சம்பவங்களை பிரபல எழுத்தாளர் பாப் உட்வர்ட் என்பவர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் விவரித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டியில் மட்டும் பின்லேடனை பார்த்திருந்த அமெரிக்க உளவுத்துறைக்கு அவர் கருப்பா? சிவப்பா? எத்தனை அடி உயரம் இருப்பார் என்பதெல்லாம் துல்லியமாக தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தனது கழுகு கண்களை அமெரிக்கா படர விட்டது.

அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை எல்லாம் பயன்படுத்தி பார்த்தார்கள். ஆனால் எதிலும் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடம் பற்றிய “சிக்னல்” விழவில்லை. ஆனாலும் அமெரிக்க உளவுப்படை சோர்ந்து போகவில்லை.

பின்லேடனின் மிக நெருங்கிய நண்பர் அபு அகமது அல்குவைதி. பின்லேடனின் நட்பு வட்டாரத்தையும், நெருங்கிய வட்டாரத்தையும் துப்பறிந்து வைத்திருந்த உளவுத்துறையினர் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தனர். இதற்கு ஒசமா பின்லேடனும் சளைத்தவன் அல்ல. போன், செல்போன், இன்டர்நெட் என்று எதையாவது வைத்திருந்தால் கேபிள் வழியாக கூட அமெரிக்க உளவு படை துப்பறிந்துவிடும் என்று நினைத்து இதை எதையுமே தனது பங்களாவில் வைத்திருக்கவில்லை.

தனது நண்பர் அல்குவைதி மூலம் தகவல்களை பரிமாறியதிலும் புதிய யுக்தியை பின்லேடன் கடைபிடித்தான். அல்குவைதி செல்போன் பேட்டரியை கழட்டிவிட்டுத்தான் பின்லேடன் பங்களாவிற்கு வருவார். யாருக்காவது தகவல் கொடுக்க வேண்டுமென்றால் அல்குவைதி பங்களாவில் இருந்து வெளியே வந்து கால்போன போக்கில் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் செல்வார். பின்னர் செல்போனுக்கு பாட்டரியை பொருத்தி உயிர் கொடுத்து பேசுவார்.

அப்படி ஒருநாள் அல்குவைதி தனது நண்பருடன் பேசிய தொலைபேசி உரையாடல்தான் அமெரிக்க உளவு படைக்கு துப்பறிய உதவியது. தொலைபேசியில் பேசிய அல்குவைதியின் நண்பர், என்னப்பா, இப்போ நீ எங்கே இருக்கிறாய்? ரொம்ப நாட்களாகவே உன்னை பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு சுரத்தே இல்லாமல் அல்குவைதி பதில் சொன்னார். முன்னால் இருந்த அதே மக்களுடன்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார். அதன்பிறகு சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர் அப்படியா, கடவுள் எல்லாம் நல்லபடியா இருக்க உதவட்டும் என்றார்.

இந்த பதில் தான் அமெரிக்க உளவுப்படைக்கு பொறியில் தட்டியது. யாரோ ஒரு முக்கிய பிரமுகருடன்தான் அல்குவைதி தங்கி இருக்கிறான் என்பதை உறுதி செய்தனர்.

உளவுப்படை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதால் சங்கேத வார்த்தைகளாலே பேசிய அல்குவைதியின் பேச்சை கூட உளவுப்படை கண்டுபிடித்து அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த மாளிகையையும் கண்டுபிடித்தார்கள்.

அதன்பிறகு அந்த வீட்டருகே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்க உளவுப்படையினர் தங்கி இருந்து கண்காணித்து வந்தனர். அந்த வீட்டில் சூழ்நிலைக் கைதி போல் ஒருவர் அடைபட்டு கிடந்ததை பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே வந்து உலாவுவார்.

அவருடைய உயரத்தை அறிந்து கொள்ள செயற்கைகோள் உதவியை நாடினார்கள். செயற்கை கோளும் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ஊடுருவி படம் பிடித்தது. அந்த நபரின் உயரமும் சுமார் 6 அடி என்று கணக்கிட்டு கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துதான் பின்லேடன் பங்களாவை உறுதிபடுத்தினார்கள். பின்லேடன் பங்களாவில் புகுந்து சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர்கள் பின்லேடனின் உயரத்தை அளவிட கையில் “டேப்” இல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

பின்னர் வேறு வழியின்றி 6 அடி உயரம் உள்ள ஒரு வீரரை பின்லேடன் உடல் அருகே படுக்க வைத்தனர். அதை வைத்து பின்லேடனின் உயரத்தை கணக்கிட்டு குறித்துக் கொண்டார்கள். இந்த காட்சியை வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து கொண்டிருந்தார் ஒபாமா.

ராணுவ வீரர் ஒருவர் பின்லேடன் உடல் அருகே படுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை ஒபாமாவால் சகிக்க முடியவில்லை. அருகில் இருந்த அதிகாரிகளிடம் 600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கேயே அழிய விட்டிருக்கிறோம். ஒரு சிறிய இஞ்ச் டேப்பை கையோடு எடுத்து போயிருக்க கூடாதா? என்று கேட்டார்.

எந்தவித பின்னணி குரலும், ஓசையும் இல்லாமல் வீடியோ காட்சிகள் பின்லேடன் பங்களாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகியது. இமை மூடாமல் அந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்த ஒபாமாவும் அதிகாரிகளும் மட்டும் பொருள் பொதிந்த விமர்சனங்களை அவ்வப்போது தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்.

பின்லேடனை சுட்டு வீழ்த்திவிட்டு அமெரிக்க படையினர் அவனது உடலுடன் வெளியேறியதை பார்த்த பிறகுதான் அதிபர் ஒபாமாவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.

No comments: