Monday, May 9, 2011

முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு : வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி.


வனவிலங்குகள் கணக்கெடுப்புக்காக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

முதுமலை காப்பகம்

தமிழகத்தில் உள்ள 6 புலிகள் காப்பகத்தில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். முதுமலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருது, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதுமலை காப்பகம் மூடப்பட்டது.

கணக்கெடுப்பு

எதிர்பாராமல் பெய்த கோடை மழை காரணமாக காட்டின் பல இடங்களிலும் நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வன விலங்கு கணக்கெடுப்பு பணிக்காக கடந்த 3-ம் தேதி மீண்டும் காப்பகம் மூடப்பட்டது. நேற்று வரை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் சம்மந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன.

மீண்டும் திறப்பு

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுகிறது என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வனக்கோட்டம்

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் கடந்த மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்பு துவங்கியது. ஆச்சர்யமாக காரமடையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் 2 இடங்களிலும் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

புலிகள் நடமாட்டம்

புலிகள் நடமாட்டம் இருப்பதாக யூகிக்கின்ற இடங்களில் ‘காமிரா டிராப்’ கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. காரமடை வனச்சரகத்தில் வைக்கப்படிருந்த காமிரா டிராப்பில் ஏப்ரல் 17ம்தேதி புலி ஒன்றின் போட்டோ பதிவாகியுள்ளது.

வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை வனச்சரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தற்போதுதான் முதன்முறையாக புலிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலால் கோவையிலுள்ள வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் இதனால் வனங்களையும், பிற விலங்குகளையும், அரிய மரங்களையும் காப்பாற்ற முடியும் என்பதே இவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.

2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

No comments: