Wednesday, April 27, 2011

யாருக்காக இந்த ஐ.நா. அறிக்கை?


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்து உள்ளது. இந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படப்போவதாகவும், கிடப்பில் போடப்படவிருப்பதாகவும் பலவிதமான செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதனிடையே, இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்றன.

அறிக்கையின் முக்கியத்துவம்

இறுதி யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக உலகளவில் முக்கிய தரப்பு ஒன்றிடமிருந்து வெளியிடப்பட்டிருப்பது இந்த அறிக்கையின் முக்கிய அம்சம். இதில், அரசாங்கத் தரப்பு மட்டுமன்றி, புலிகள் தரப்பு மேற்கொண்ட குற்றங்க ளையும் அது விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது.

அரச படைகள் ஷெல் தாக்குதல்கள், உணவுத் தடை, யுத்தப் பகுதிகளிலிருந்து வந்த மக்களைத் துன்புறுத்தியமை, புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என்றால, புலிகள் தரப்பும் பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தப்பியோட முயன்றவர்களைச் சுட்டுக்கொன்றமை, சிறுவர்களைப் பலாத்காரமாகப் படையில் சேர்த்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதுவும் இப்போதுதான் தெரிய வந்துள்ள புதிய விடயங்கள் என்று சொல்வதற்கில்லை. போர் நடைபெற்ற பகுதி களில் வாழ்ந்த மக்களும், அவர்கள் மூலமாக ஏனையோரும் அறிந்திருந்த விடயங்களே, ஐ.நா. அறிக்கையாக வந்திருக்கிறது. புலிகள் தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பதே இதில் புதிதாக உள்ளது.

நோக்கம் என்ன?

இறுதிப் போர்க் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இப்போது அக்கறைப்படும் ஐ.நா., போர்க்குற்றங்கள் நடைபெற்ற காலத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? இப்போது என்ன புதிய அக்கறை வந்துள்ளது?

உச்சக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், புலம்பெயர் தேசங்களெங்கும் வீதிகளில் இறங்கிப் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எந்தத் தரப்பும் செவிமடுக்கவில்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு அப்போது ஐ.நா.வோ, அல்லது எந்தவொரு மேற்குலக நாடோ முன்வரவில்லை.

மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வாளாதிருந்தவர்கள், இப்போது திடீர் அக்கறை கொள்ளும் நோக்கமென்ன? இந்த அறிக்கையும், இதன் மூலமாக எடுக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும், இறந்துபட்டவர்களை மீட்டுத் தருமா என்ன?

போரை நடத்தியவர்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து முழு உலகமுமே நடத்தியது என்பதுதான் உண்மை. புலிகளின் ஆனையிறவு முகாம் தாக்குதல், கட்டுநாயகா விமானத்தளத் தாக்குதல் போன்றவற்றால் விழித்தெழுந்த உலக வல்லரசுகள், விடுதலைப் புலிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட வழிசெய்தனர்.

புலிகள் அதைப் புறந்தள்ளி போர் வழிமுறையை மீண்டும் நாடியபோது, அவர்களை அழித்துவிடக் முடிவு செய்தனர்.

ஏன்?

இந்துசமுத்திரப் பிராந்தியம் என்பது முழு உலகத்தினதும் முக்கியமான கப்பல் போக்குவரத்து மார்க்கம். இதனால்தான் காலனித்துவக் காலம் முதல் உலக நாடுகள் இலங்கை மீது ஒரு கண் வைத்து வருகின்றன.

இந்த இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இலங்கை என்ற குட்டித் தீவில், ஒரு அரசு அல்லாத அமைப்பு, வான்படை, கடற்படை, பீரங்கிப் படைகள், தற்கொலைப் படை என்று அதீத பலத்துடன் இருப்பதை எந்த நாடும் விரும்பவில்லை. அரசாங்கம் ஒன்றைப் போலன்றி, அரசு அல்லாத அமைப்பொன்றை எந்தவொரு சர்வதேச சட்டங்களும் கட்டுப்படுத்தாது. இந்த நிலையில், அத்தகைய அமைப்பிடமிருக்கக்கூடிய அதீத போர்வலு, முழு உலகுக்குமே ஆபத்தாகிவிடும் என்பதே உலக வல்லரசுகளின் கணி்ப்பாக இருந்தது.

இதனாலேயே, போர்நிறுத்த உடன்படிக்கை, பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நோர்வே மூலமாக மேற்குலகம் அதிக பணத்தையும், முயற்சிகளையும் அள்ளிக் கொட்டியது. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப் புலிகளின் போர் வலுவைக் குறைத்து அல்லது சிதைத்து, ஏதோவொரு தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்து போர் நடைபெறாமல் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது.

ஆனால், மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்த ரணில் விக்கிரமசிங்காவை தேர்தலில் தோற்கச் செய்து, தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தபோது, சாம, பேத, தானம் கடந்து, தண்டமே ஒரே வழி என்ற முடிவுக்கு உலக வல்லரசுகள் வந்துவிட்டன.

இந்த உலக வல்லரசுகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடன்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு படைக்கல உதவிகளையும், பயிற்சிகளையும், கடற் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், புலனாய்வுத் தகவல் மற்றும் சற்றலைட் தகவல் உதவிகளையும் வழங்கின. இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

அரசியல் இராஜதந்திர நகர்வுகளை அதன் வழியிலேயே எதிர்கொள்ளாமல் போர் வழியைத் தெரிவுசெய்த விடுதலைப் புலிகள், இந்த அனைத்துலகப் போர் முகத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தோற்றுப்போக நேர்ந்தது.

புதிய சூழல்

எனினும், போரின் இறுதி நாட்கள் மற்றும் போருக்குப் பிந்திய சூழலை இந்தியாவும், சீனாவும் வேகமாகத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டுவிட்டன. இதனால், இதுவரை காலமும் மேற்குலகின் பிடிக்குள் இருந்த இலங்கை, அதிலிருந்து விடுபட்டு இந்திய, சீன, ரஷ்ய ஆதரவுடன் அதற்குச் சவால் விட முடிந்தது.

இதுவே மேற்குலகுக்கு ஏற்பட்ட சங்கடம். இதனால்தான் இப்போது அவர்களுக்குப் போர்க்குற்ற விசாரணை தேவைப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை என்ற நெருக்குவாரத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் முடிந்தளவுக்குக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கம்.

மேற்குலகின் இந்த நெருக்குவாரத்துக்கு ஓரளவுக்கேனும் இலங்கை அரசு பணிந்து அசைந்து கொடுக்குமானால், இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுவிடும். அரசியலில் இதெல்லாம் சகஜம்.

இந்த சர்வதேச அரசியல் யதார்த்தம் புரியாமல், ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையால் ஏதோ தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் மகிழ்ச்சி யடைவது சுத்த மடமைத்தனம். நீதி கிடைக்கவேண்டும் என்பது நியாயமான கோரிக்கையேயாயினும், மேற்குலகின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் சாணக்கியத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று பகல் கனவு காண்பது முட்டாள்த்தனம்.

ஒருவேளை இந்த விசாரணைகள் மூலம் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப் பட்டுவிட்டால், அதன்மூலம் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா என்ன? அதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த அறிக்கை தமிழர்களுக்கு வழங்குகிறது?

எப்படித் இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையை இலங்கை, இந்திய, மேற்குலக நாடுகள் இத்தனை காலமும் தமது நலன் நோக்கிலிருந்து பந்தாடி வந்தனவோ, அதுவே இப்போதும் மீண்டும் அரங்கேறுகிறது. இதைப் பார்த்து மயங்கினால் இன்னும் ஆபத்துக்களை நோக்கித்தான் தமிழர்கள் செல்லவேண்டியிருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் VS புலம்பெயர் மக்கள்

மேற்குலக நாடுகளின் நலன்களை மையப்படுத்தும் இந்த அறிக்கை, அந்த நாடுகளில் அதிகளவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை அதிகளவில் மகிழ்வித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மேற்குலக நாடுகளில் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு அந்த நாடுகளின் நலன்களும் அவசியமே என்பதால், அவர்கள் பக்கத்தில் இது சரியாக இருக்கலாம்.

ஆனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுடைய நிலைமை அப்படியல்ல. மேற்குலகின் நலன்களுக்கோ அன்றி வேறெந்த நாடுகளின் நலன்களுக்கோ துணைபோவதால் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடப் போவதில்லை. இன்னும் மோசமாகவே செய்யும்.

போரின் இறுதி நாட்களில், ஒரு கவளம் சோற்றுக்கும் வழியின்றி, தினம்தினம் பிணங்களாகக் குவிந்துகொண்டிருந்தபோது திரும்பிப் பார்க்காத தேசங்களும், சர்வதேச மனித உரிமைகளும், சட்டங்களும், எல்லாம் முடிந்தபின் இப்போது விழித்தெழுவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதே இவர்களது கேள்வியாக இருக்கிறது.

சட்டம் எப்போதும் குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கும். இனிமேல் அத்தகைய குற்றங்கள் நடப்பதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று அது வக்காளத்து வாங்கும். ஆனால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் போனபின், எஞ்சியிருப்பவர்களின் நிலை பற்றி சட்டங்கள் ஒருபோதும் பேசுவதில்லை.

கொலைசெய்தவரைக் கழுவேற்றுவதால் இறந்துபோனவர் உயிர்த்துவிடுவாரா? ஐ.நா. கூறுவதுபோல் மக்கள் மீது ஷெல் அடித்தவர்கள் மீதும், தப்பிவர முனைந்த வர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

நடந்துபோன விடயங்களுக்கு அரசாங்கத்தையோ, புலிகளையோ குற்றஞ் சாட்டிக்கொண்டிருப்பது, ஏசி அறைகளுக்குள்ளிருந்து அறிக்கை தயாரித்து அளவளாவுபவர்களுக்கு வேண்டுமானால் சௌகரியமாக இருக்கலாம்.

போரில் இழந்தவர்களும், இழந்தவைகளும் போக, மிஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்ப ஏதாவது உருப்படியாகச் செய்ய முடிந்தால், அதுவே இப்போது புண்ணிய காரியமாக இருக்கும்.

http://www.jaffnatoday.com/?p=770

No comments: