Wednesday, April 27, 2011

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்!!


பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கியதால், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. எனவே, பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி கேட்டபோது, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில், மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதிராக சூழ்நிலை திரும்பி விடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத்தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண்ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.

இதனால் தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடிவரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன், எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றார்.

லிட்டருக்கு ரூ. 3 உயரும்.

வரும் மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ,கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, ரூ.60யை தாண்டிவிட்டது.

இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயர வாய்ப்புள்ளது.

1 comment:

மனோவி said...

இது தான் எண்ணெயில் கொழுப்பதா