Wednesday, April 27, 2011

ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை புத்தகத்தை வெளியிட தடை : ஐகோர்ட்டு உத்தரவு.

எழுத்தாளர் வாசந்தி எழுதிய "ஜெயலலிதா-ஒரு சித்திரம்'' என்ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை புத்தகத்தை வெளியிட தடை; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த சிவில் வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருவரைப்பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் தகவலை சரிபார்த்துவிட்டு, அவரது கருத்தையும் சேர்த்து வெளியிடுவதுதான் பத்திரிகைகளின் நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். ஒருவரது வாழ்க்கை சரிதையை வெளியிடுவதற்கு முன்பதாக இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த நிலையில் வாசந்தி, "ஜெயலலிதா ஒரு சித்திரம்'' (ஜெயலலிதா எ போர்ட் ரெய்ட்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை புதுடெல்லியில் உள்ள பென்குயின் புக்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வரும் மே மாதம் வெளியிட உள்ளது. வெளியாக இருக்கும் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி ஆங்கில வாரப்பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், எனது பிறப்பு, எனது ஆரம்பகால பெயர் விவரங்கள், "ஜெயா'' என்ற பெயர் எங்கள் குடும்பத்தில் வந்த விதம், எனது தந்தையைப் பற்றிய தகவல்கள், எனது சினிமா வாழ்க்கை, எனது நட்பு வட்டாரம், என்னிடம் பாசம் காட்டியவருக்கு நான் எழுதிய கடிதங்களின் விவரம், எனது அரசியல் பொது வாழ்க்கை, அதில் நான் சந்தித்த சவால்கள், வழக்குகள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை குறிப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது.

இந்த விவரங்கள் வெளியானால் என்னைப்பற்றி மக்களிடம் உள்ள நல்லெண்ணம் பாதிக்கப்படும். அரசியல் வாழ்க்கையில் எனது நிலையில் பாதிப்பு உருவாகும். எனது பொது வாழ்க்கைக்கு பங்கம் நேரிடும். இந்த விவரங்களை வெளியிடுவது, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் உரிமைகளை மீறுவது போன்றது. என்னைப்பற்றி வாசந்தி எழுதியுள்ள சரிதை, பொய்யானது, மரியாதை குறைவானது, உள்நோக்கம் கொண்டது, அவதூறானது, நாகரீகமற்றது, எல்லை தாண்டிய அநாகரீகமானது. எனது வாழ்க்கை பற்றி அவர் எழுதியுள்ள சரிதையில் சில விஷயங்கள் மறைமுகமாக தெரிவிக்கப்படுகின்றன. அவை உண்மைக்கு மாறானவை மற்றும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவதூறான தகவல்களாகும். எனவே அந்த புத்தகத்தை எந்த வடிவிலும், எந்த பெயரிலும், எந்த நாளிலும், எனது சரிபார்த்தல் இல்லாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தன்னால் சரிபார்க்கப்படாத தகவல்கள் அவரது சரிதையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவை பொய்யானவை என்றும் அவதூறானவை என்றும் வழக்கில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் எழுதப்பட்ட தகவல்களை சரிதை (பயோகிராபி) என்று குறிப்பிடமாட்டேன் என்று ஆங்கில நாளிதழில் வாசந்தி கூறியிருப்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது, சரிதை எழுதுவதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வழக்கு வாதத்தின்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல், "ஜெயலலிதாவின் சரிதை புத்தகத்தை வாங்குவதற்கு இணைய தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். வெளியிடப்படும் கட்டுரையில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் இருக்கிறது

என்றால், அதை வெளியிடுவதற்கு முன்னதாக உண்மை நிலவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே வாசந்தி எழுதிய "ஜெயலலிதா எ போர்ட்ரெய்ட்'' என்ற சரிதையை வெளியிடுவதற்கு ஜுன் 7-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜுன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்று பென்குயின் நிறுவனம், வாசந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: