Wednesday, April 27, 2011

கேன்சர், மஞ்சள் காமாலையை பரப்பும் தரமற்ற ஐஸ்கிரீம் குளிர்பானம்.

கேன்சர், மஞ்சள் காமாலையை பரப்பும் தரமற்ற ஐஸ்கிரீம் குளிர்பானம் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

உயர் தொழில்நுட்பம், நவீன வசதிகள் அனைத்தும் நிறைந்த சென்னையில் உணவு பண்டங்கள் மூலம் பரவி வரும் வியாதிகள் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையில் தினமும் ஓட்டல்களில் 15 முதல் 25 லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். பிரபல ஓட்டல்களில் எல்லோராலும் சாப்பிட வசதி இருக்காது. எனவே பெரும்பாலோனோர் தெருவோர கடைகளில் குறைந்த விலையில் உணவு பண்டங்களை சாப்பிடுவதை விரும்புகிறார்கள்.

தெருவோரங்களில் விற்கப்படும் தரமற்ற உணவு பண்டங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றால் பலவிதமான நோய்கள் பரவுவதாக புகார் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் சுமார் 2 டன் எடையுள்ள தரமற்ற ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது பற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தம் கூறியதாவது:-

தெருவோர குளிர்பான கடைகளில் அழுகிய பழங்கள், தரமற்ற தண்ணீர் மூலம் பழ ஜூஸ் தயாரிக்கிறார்கள். ஒருநாள் விற்பனையாகாத பழஜூசை மறுநாள் மீண்டும் புதிய பழஜூசுடன் கலந்து விற்கிறார்கள். அதை வைத்து இருக்கும் பாத்திரங்களையும் சுத்தமாக பராமரிப்பது இல்லை.

பழ ஜூஸ் தயாரிப்போர் கைகளால் பழங்களை பிசைகிறார்கள். இதனால் உருவாகும் கிருமிகள் மூலம் வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. கோடைகாலத்தில் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் குளிர்பானத்துக்கு அடுத்ததாக ஐஸ்கிரீம் தயாரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது.

சாய பொடி கலந்து ஐஸ்கிரீம் தயாரிக்கிறார்கள். இதனால் கேன்சர், வயிற்று புண், தொண்டை ரணம், மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.

வடை போன்ற உணவு பலகாரங்கள் தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் இரண்டு முறைதான் எண்ணையை பயன்படுத்த வேண்டும். ஆனால் தெருவோர கடைகளில் ஆறு, ஏழு முறை ஒரே எண்ணையை பயன்படுத்துகிறார்கள்.

சமைத்து வைத்த பொருட்களையும் ஈக்கள் மொய்க்கும் படி வைத்துள்ளனர். நேதாஜி நகர், தியாகராய நகர் உள்பட சில இடங்களில் குடிசை தொழில்கள் போன்று போலியான தர மற்ற குளிர்பானங்கள் தயாராகிறது.

அதிகாரிகள் பல பிரிவுகளாக சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். சுகாதாரமான முறையில் தரமாக தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாபாரிகள் தரப்பில் கூறும் போது ஸ்டார் ஓட்டல்களில் வசதி படைத்தவர்கள்தான் சாப்பிட முடியும். நாங்கள் குறைந்த விலைக்கு தருவதால் எங்களிடம் சாப்பிடுகிறார்கள். எங்கள் தொழிலில் அதிகாரிகள் தலையீட்டால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம். சுகாதாரமான முறையில்தான் உணவு பொருட்களை தயாரிக்கிறோம் என்றனர்.

No comments: