Wednesday, April 27, 2011

இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'திடீர்' நெருக்கடி.


இலங்கை அரசின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,

இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. தமிழர்கள், சிங்களர்கள் இடையே சமத்துவ நிலை ஏற்பட வழி வகுக்கப்பட வேண்டும்.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்:

முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சிபிஐ மூலம் மத்திய அரசு திமுகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதைத் தொடர்ந்து பதிலடியாக தற்போது இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் போட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக திமுக போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: