Wednesday, April 27, 2011

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம் ; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்.

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம்; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருகிற 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

காலை 10 மணிக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி வந்தார். அதன் பிறகு அவரது தலைமையில் கூட்டம் தொடங்கியது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம் பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அதை எப்படி சட்டப்படி அணுகுவது, இன்றைய அரசியல் நிலவரம், எதிர்கால நடவடிக்கைகள் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவது போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளதோடு, பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில், அவற்றில் ஒரு நிறுவனத்தினிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, பின்னர் வட்டி யுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை, வருமான வரித்துறை சான்று ஆவணங்களுடன் ஒப்படைத்திருப்பினும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழியையும், இயக்குநர் சரத்தையும் சி.பி.ஐ. துறையினர் நீதிமன்றத்திற்கு அளித்த 2-வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்தக் குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.

2-ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, எப்படியாவது தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, இன்று தொடரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின ரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே ஊழல் செய்வதையே தமது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி தலைவர்களும் திராவிட இயக்கத்தின் ஆணிவேராக உள்ள தி.மு.க.வையும் அதன் செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞரையும், எப்படியேனும் அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அவலாசை கொண்டு அலையும் ஏடு களும், இந்தச் செய்தியை மூல தானமாகக் கொண்டு, கழகத்திற்கு அதிர்ச்சி ஏற் படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள் நோக்கத்துடன், பல வகை யிலும் செயல்படுவதை, ஊடகங்களின் நிருபர்கள் எழுப்பும் கேள்விகளாலும், வெளியிடும் செய்திகளாலும் அறியலாம்.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சார மாயைக்கு கழகம் இரையாகாது என்பதுடன், எதையும் அளவறிந்தும், முறை அறிந்தும், செயற் படுவதன் மூலம் உண்மையை நிலைநாட்டிடும் சிறப்புடைய தி.மு.க., இந்த வழக்கிலும், உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments: