கலாநிதி மாறன், தனது் வக்கீல் மூலமாக அனுப்பிவைத்த கடிதத்தின்படி அவர், இன்று (26ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்தியா திரும்பவேண்டும். இன்று அல்லது நாளை அவரை நேரில் ஆஜராகும்படி புதிய சம்மன் ஒன்றைக் கொடுக்கும் ஏற்பாடுகளில் காவல்துறை இறங்கியிருக்கின்றது.
கேள்வி என்னவென்றால், கலாநிதி இன்று இந்தியா வந்திறங்குகிறாரா? அல்லது, ஏற்கனவே வந்துவிட்டாரா?
கலாநிதி நேற்று இரவுவரை அவரது சென்னை வீட்டுக்கு வந்ததாக தகவல் இல்லை. அவர் புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரடியாக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கவும் மாட்டார்.
அதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, காலாநிதி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், முன்புபோல வி.ஐ.பி. கேட் வழியாக வெளியேறுவதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று சொல்ல முடியாது. சாதாரண பயணிகள் வாயிலூடாக வெளியே வந்தால், பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொள்வார்கள்.
சொந்தமாக மீடியா நிறுவனம் வைத்திருக்கும் கலாநிதிக்கு, எங்கெல்லாம் நிருபர்களும், போட்டோகிராபர்களும் நிற்பார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதுவும் அவர் 26ம் தேதி நாடு திரும்புவார் என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனால், 25ம், 26ம் தேதிகளில் எந்தெந்த மீடியாவின் ஆட்கள் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, கலாநிதிக்கு நன்றாகவே தெரியும்.
அடுத்த காரணம், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், அவர் வருவதற்கு முன்னரே PNM என்ற லிஸ்ட் ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவினரின் கைகளுக்கு போய்விடும். அது அப்படியே தமிழக உளவுத்துறையின் கைகளுக்கு போவதற்கு அதிக நேரம் எடுக்காது.
PNM என்பது, ஏர்லைன்ஸ் பரிபாஷையில் Passenger Name Manifest என்பதன் சுருக்கம். விமானம் புறப்படும் இடத்திலிருந்து கிளம்பி 30 நிமிடங்களுக்கு உள்ளே இந்த லிஸ்ட் ஆட்டோமேட்டிக்காக விமானம் போய்ச்சேரும் விமான நிலையத்திலுள்ள ஏர்லைன் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இந்த லிஸ்ட்டில் விமானத்தில் வந்திறங்கப்போதும் பயணிகள் அனைவரது பெயர்களும் அகர வரிசையில் இருக்கும்!
உதாரணமாக, சென்னை வரும் லுஃப்தான்சா விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிராங்பேர்ட்டிலிருந்து அந்த விமானம் மதியம் 11.05க்கு புறப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்பட்டால், 11.35க்கு முன் PNM சென்னையிலுள்ள லுஃப்தான்சா அலுவலக பிரின்டருக்கு வந்துவிடும்.
அப்போது சென்னையில் நேரம், மாலை 2.35. விமானம் சென்னையில் தரையிறங்குவது இரவு 11.45க்குத்தான்! அதாவது, விமானம் வந்திறங்குவதற்கு கிட்டத்தட்ட 9 மணிநேரத்துக்கு முன்னரே PNM வந்துவிடும்.
அவ்வளவு அவகாசம் போதாதா? காவல்துறை செய்ய நினைத்தால், மேஜிஸ்ட்ரேட் உத்தரவுகூட வாங்கி, விமான நிலையத்தில் கோழி அமுக்குவதுபோல ஆளை அமுக்கி விடலாம்.
கலாநிதி விவகாரத்தில் காவல்துறை அப்படிச் செய்யுமோ செய்யாதோ என்பது வேறு விஷயம். ஆனால் செய்யலாம். அதனால்தான் எழுதினோம், கலாநிதி புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேரில் வந்திறங்க மாட்டார் என்று!
ஓசைப்படாமல் இந்தியா வந்திறங்க சுலபமான வழி, வெளிநாட்டு விமானங்கள் வரும் சிறிய விமான நிலையம் ஒன்றுக்கு வருவதுதான். இந்தியாவில் பல விமான நிலையங்கள் அப்படி இருக்கின்றன.
உதாரணமாக, கேரள மாநிலத்திலுள்ள கொச்சின்.
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து புறப்பட்டு, மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ட்ரான்சிட் போட்டுக் கொண்டு நேரே கொச்சின் வரலாம். அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களில் வந்திறங்கும் விமானங்கள், அட்டகாசமான டைமிங்!
யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்றே கண்டுபிடிப்பது கஷ்டம்!
குறிப்பிட்ட நேரம் என்று குறிப்பிடுவது, அதிகாலை நேரத்தை! இதோ பாருங்கள்… ஒரு அதிகாலையில் கொச்சினுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் டைமிங்கை.
துபாயிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK530, அதிகாலை 3.05க்கு வந்திறங்கும். அடுத்து அபுதாபியிலிருந்து புறப்படும் எதியாட் ஏர்லைன்ஸின் EY280, 3.30க்கு வந்து சேரும். அடுத்த 10 நிமிடங்களில் 3.40க்கு, தோஹாவிலிருந்து புறப்படும் கத்தார் ஏர்வேஸ் QR264 தரையிறங்கும்.
அளவில் சிறிய கொச்சின் விமான நிலையத்தில், அதிகாலையில் இப்படி 3 வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கினால், இமிகிரேஷன் மற்றும் அரைவல் கன்ட்ரோல் பகுதிகள், பொள்ளாச்சி சந்தைக்குள் புகுந்துவிட்டது போல இருக்கும்.
இப்படியான நேரத்தில், கர்னல் கடாபி வந்திறங்கினாலே கண்டுபிடிக்க முடியாது. கலாநிதி மாறனை யார் கண்டுபிடிப்பது?
viruvirupu.com.
1 comment:
//உதாரணமாக, கேரள மாநிலத்திலுள்ள கொச்சின்.//
நீங்க வேற!நம்மை விட சேட்டன்கள் கண்ணுல எண்ணைய விட்டு செய்தி சேகரிச்சிட்டுருக்காங்க! ஆமா!நீங்க கலாநிதிக்கு தப்பிக்க வழி சொல்லிக்கொடுக்கிறீங்களா இல்ல ஆள மாட்டிவிடப்பார்க்கீறீங்களா:)
Post a Comment