சமூகத்தின் நாடித்துடிப்புகளை கச்சிதமாக அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தும் முதலாளித்துவத்தின் இப்போதைய அழுகுணி ஆட்டத்தில் அவர்தான் மதிப்பிற்குரிய ராஜா. ஊழலில் ஊறித் திளைத்த அதிகார வர்க்கத்தின் மீது சாதாரண மனிதனுக்கு கோபமும், வெறுப்பும் மண்டிக்கிடந்த வேளையில் அவரது வருகையை முதலாளித்துவ ஊடகங்கள் அறிவித்தன. தங்களது ஆக்டோபஸ் சக்தியால் ஒரே நாளில் அவர்தான் தேசத்தின் தலைவர் என்று அடையாளம் காட்டின. விடாமல் எந்நேரமும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டாம் சுதந்திரப் போரை அவர் துவக்கி விட்டதாக கணிக்கின்றன.
இந்த நாடகத்தின் ஆரம்பத்திலேயே ஒரு ஊழல் இருந்தது. சட்டங்களை வரையறை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் இருக்கும்போது அதன் எல்லையை மீறினார் அன்னா ஹசாரே. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது லோக்பால் மசோதாவை வரைவு செய்கிற குழுவில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தார். அப்படியொரு அதிகாரபூர்வமற்ற அதிகாரத்தை அவரே எடுத்துக்கொண்டார். உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று நேரான வழிகளில் போராடுவதாய் சொல்லிக்கொண்ட அன்னா ஹசாரேவின் குரல் புறவாசல் வழியாக தான் இப்படி நுழையக் கதவை திறக்கும்படி அரசிடம் அடாவடியாக எழுப்பியது.
பாராளுமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அவருக்கு நம்பிக்கையில்லையென்றால் முதலில் அவரது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இருந்து தேர்தலை சந்தித்து, வென்று, பாராளுமன்றம் சென்று, சட்டத்தை தாங்கள் நினத்தது போல இறுதி செய்து, அமல் படுத்த முனைந்திருக்க வேண்டும். அப்படியெல்லையென்றால், இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய மாட்டார். இந்த முதலாளித்துவ ஊடகங்கள் அவரை ஒரே நாளில் குப்பையில் தூக்கி எறிந்துவிடும். அரசோ ‘தேசத் துரோகி’ என குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.
அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் குறுக்கு வழியில், முதலாளித்துவத்தின் தேரோட்டவே அன்னா ஹசாரே விரும்புகிறார். லோக்பால் மசோதாவை இவரெல்லாம் சேர்ந்து வரைவு செய்வார்களாம். அதை பாராளுமன்றம் இறுதிப்படுத்துமாம். விளக்கெண்ணய்த்தனமாக இல்லை இது? இதற்குத்தான் இத்தனை செய்திகளும், ஆரவாரங்களும் பேரிரைச்சலாய் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
எல்லாம் இந்திய முதலாளிகளின் திட்டப்படியே வெற்றிகரமாக அரங்கேற்றப் படுகிறது. இந்த சிவில் சமூகத்தின் மத்திய தர வர்க்கத்தில் ஒரு பகுதி எப்போதும் போல், எதையும் யோசிக்காமல், ‘தங்கள் தேவ தூதன் வந்துவிட்டார்’ என சட்டென தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர். இருண்ட இந்தியாவின் ஓளிவிளக்கு அவர்தான் என வாய் கிழிய பேசுகின்றனர். அவர் குறித்து கேள்விகள் எழுப்பினால் ‘யாருமே பூனைக்கு மணி கட்டவில்லை, இவராவது முன் வந்திருக்கிறாரே” என வியாக்கியானம் வேறு. ஐயா, இந்த லோக்பால் மசோதா என்றால் என்ன, யார் யாரெல்லாம் இதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் என்று இருபது வருட வரலாற்றை கொஞ்சமேனும் அறிந்துகொண்டு பேசுங்கள் என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் நேற்று வரை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் இன்று இவர் ஒருத்தர் முகத்தின் மீது மட்டும் வெளிச்சம் காட்டியதும் ஏன் இப்படி ‘கண்டுகொண்டேன்’ என துள்ளிக் குதிக்கிறார்கள்.
இதே ஊழல் எதிர்ப்புக்காக, நாளை பெரும் மக்கள் போராட்டம் வெடித்தால் இதே முதலாளித்துவ ஊடகங்கள் தங்கள் முகங்களை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும். அப்படி எதுவும் விபரீதமாக நடந்துவிடக் கூடாது என்று அனுப்பப்பட்ட தூதரே அன்னா ஹசாரே. தெளிவான பார்வை, தீர்க்கமான செயல்திட்டம் இல்லாமல் விளக்கெண்ணய்த்தனமான குழப்பங்களுக்குள் மக்களின் கோபத்தையும், வேகத்தையும் நீர்த்துப் போகவைக்கவே இந்த ஏற்பாடுகள். பெரும் ஆதரவைத் திரட்டி, மிகப் பிரம்மாண்டமானதாய் அவர்களே காட்டி, கடைசியில் அன்னா ஹசாரேவால் கூட முடியவில்லை என அவநம்பிக்கையையும் விதைத்து, ஒரு தலைமுறையை காயடைக்கும் வேலையே இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே, ஊழலை ஒழிக்க வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்கிறார். அவர் சமீபத்தில் சொன்னதைக் கேளுங்கள் “மன்மோகன் சிங் நல்ல மனிதர். நம்பிக்கையானவர். சோனியா காந்திதான் அவரை கட்டுப்படுத்துகிறார்”. அதாவது இந்திய முதலாளிகளுக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட மன்மோகன்சிங் மீது எந்தத் தவறும் இல்லையாம். மொத்தப் பழியையும் சோனியா காந்தி மீது சுமத்தி, மன்மோகன்சிங்கை பாதுகாப்பதில் இந்திய முதலாளிகளுக்கு இருக்கும் அக்கறையே அன்னா ஹசாரேவிடமிருந்து இப்படி வெளிப்படுகிறது.
இவரை காந்தியென சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. ஒத்துழையாமை இயக்கமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும், மக்களின் போராட்டமாக பரிணாமம் கொண்டபோது காந்தி தனது அஹிம்சைக்கு எதிரான போராட்டங்களென அவற்றை நிறுத்திக்கொண்டார். அப்போது ஆங்கிலேயரிட மிருந்து இந்தியா தங்கள் வசம் வரவேண்டும் எனும் அபிலாஷை கொண்ட இந்திய முதலாளிகளின் ஆதரவு காந்திக்கு இருந்தது. அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே இப்போது அதே முதலாளிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
ஆனால், காந்தியின் கை மீறி போராட்டங்கள் மக்களின் கைகளுக்கு வந்த பிறகே, வெள்ளையன் இந்தியாவை விட்டு புறப்படும் காலம் தனக்கு நெருங்கியதை உணர்ந்தான். அதுதான் வரலாறு இந்தியாவுக்கு. ஊழலுக்கும்தான்.
1 comment:
இந்திய முதலாளிகளின் எடுபிடி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,அமெரிக்க பிற்போக்கு சக்திகளின் பிரதிநிதி JP மற்றும் காமராஜ்.அண்ணா ஹசாரே,சாந்தி பூசன் எல்லோரும் டுபாகூர். இந்திய இடதுசாரிகளின் நியாய தராசை புரிந்து கொள்ளும் அறிவை இறைவன் நமக்கு அருள்வானாக.
Post a Comment