Thursday, June 9, 2011

கச்சத்தீவு வழக்கை வலு சேர்க்க தமிழக வருவாய் துறையை சேர்க்கக்கோரி மனு : ஜெயலலிதா.


முதல் அமைச்சர் ஜெயலலிதா 09.06.2011 அன்று சட்டப்பேரவையில், கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய் துறையை சேர்க்க வலியுறுத்த கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இப்பேரவையில் நான் முன்மொழிய விழைகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெருபாரி வழக்கில் தீர்ப்பளித்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

No comments: