Thursday, June 9, 2011

சமச்சீர் கல்வி பற்றி என் கருத்துக்கள். ஜெயமோகன்.

என்னை ஒரு வார இதழில் இருந்து அழைத்துச் சமச்சீர் கல்வி பற்றி என் கருத்தைக் கேட்டார்கள். நான் சொன்ன கருத்துக்கள் நிபுணரின் பார்வையில் அல்ல. நேரடியாக யதார்த்தங்களைப் பார்ப்பவன் என்ற முறையில்..

அவை சுருக்கமாகக் கீழே.

1. நமது இன்றைய கல்வி என்பது,பண்பாட்டுக்கல்வி அல்ல. சான்றோர்களை உருவாக்கும் கல்வி அல்ல. அதை வேறெங்கோதான் பெறவேண்டியிருக்கிறது. நமது இன்றைய கல்வியின் நோக்கம் இரண்டு. சராசரியான குடிமகன்களை உருவாக்குவது. அவர்களுக்கு நவீன வணிக உலகில் வேலைவாய்ப்புகளைப் பெறும் தகுதியை அளிப்பது. சான்றாண்மைக்கல்வி தேவையா என்றால் தேவை. ஆனால் நடைமுறையில் நம் முன்னால் உள்ள தேவை இவ்விரண்டும் மட்டுமே. பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இதற்காகத்தான்

2. இந்நிலையில் நம்முடைய கல்வியின் முக்கியமான இலக்கு, வேலை வாய்ப்புக் கான சர்வதேசப்போட்டியில் பங்குபெற்று வெல்லும் திறனை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதாகவே இருக்க முடியும். இதில் நம்முடைய போட்டியாளர்கள் முதல் உலக நாடுகள் அல்ல. அவர்கள் நிபுணர்களை உருவாக்கும் கல்வியை அளிக்கிறார்கள். நாம் இன்றைய நிலையில் அந்தக் கல்வியை அளிக்க முடியாது. அதற்கான பணமும் வசதியும் இன்று நம் கல்விச்சூழலுக்கு இல்லை. நாம் போட்டியிடுவது முதல் உலகுக்கு சேவைகளை அளித்து வேலைவாய்ப்புப் பெறும் நாடுகளுடன். அந்தப் போட்டியில் நாம் ஓடுவதற்கான கல்வியே நமக்கு உடனடியான தேவை.

3. அந்த நோக்குடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியப் பாடத்திட்டமுறை, மெட்ரிக் பாடத்திட்டமுறை ஆகியவற்றையே நாடுகிறார்கள். காரணம் அவற்றுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கிறார்கள். அது நடைமுறை உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பாடத்திட்டத்தில் பயில்பவர்களை விட இந்தப் பாடத்திட்டமுறைகளில் பயில்பவர்களே இன்று உருவாகிவரும் வேலைவாய்ப்புகளை அதிகம் பெறமுடிகிறது. உண்மையில் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசமுடிந்தாலேகூட வேலை கிடைக்குமென்ற சூழல் இருக்கும் இன்று,மாநிலக்கல்வித்திட்டத்தில் பயில்பவர்கள் மிகமிகப் பின்தங்கித்தான் இருக்கவேண்டியிருக்கிறது. நட்சத்திர ஓட்டல்களில் சர்வர் வேலைக்கே கூட மெட்ரிக் பள்ளியில் படித்திருக்கவேண்டும் என்ற விதி இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

4. இன்றையநிலையில் சர்வதேசப்போட்டிக்கு ஏற்ப நம்முடைய பாடத்திட்டங் களை நவீனப்படுத்திக்கொண்டே இருந்தாகவேண்டும். ஆகவே அவை மேலும் மேலும் கடினமானவையாக ஆகியபடியேதான் சென்றாகவேண்டும். ஆகவே மத்தியப்பாடத்திட்டத்தையேகூட இன்னமும் நவீனப்படுத்தி இன்னும் கடினமாக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

5. மாணவர்களும் அதற்குத் தகுதியாகவே இருக்கிறார்கள் என்பது தேர்வுமுடிவு களில் இருந்து தெரிகிறது. கடுமையான போட்டியில் இருக்கும் மாணவர்கள் இன்றைய மாநிலப் பாடத்திட்டத்தில் எழுத்து எழுத்தாகவே மனப்பாடம்செய்து 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்களை வாங்கிக்குவிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இன்னும் அதிக சவால்களை அளிப்பதே முறையாகும்.

6 . இந்நிலையில் மாநிலக்கல்வித்திட்டத்தை உடனடியாக மெட்ரிக் பாடத்திட்டம் அளவுக்கே மேம்படுத்துவதும் அல்லது எல்லாவற்றையும் மத்திய பாடத்திட்டம் அளவுக்கு மேம்படுத்துவதும்தான் அவசியம். சொல்லப்போனால் மத்தியப்பாடத் திட்டத்தை இன்னும் மேம்படுத்தி எல்லாப் பள்ளிகளிலும் அதைக் கற்பிக்க வேண்டும் என்பதே சரியான இலக்காக இருக்கும். அதுவே உண்மையான சமச்சீர் கல்வி.

7. ஆனால் அதை இங்கே செய்ய முடியாது. மாநிலக்கல்வித்திட்டத்தை உருப்படியாக முன்னெடுக்கக்கூடிய கல்விக்கூட வசதிகள் இங்கே இல்லை. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் 40 சதவீதம் பேர் ஏதேனும் விடுப்பில் இருக்கிறார்கள். தொகுப்பூதிய, மறைமுக ஊதிய ஊழியர்களே பாதி வகுப்புகளை எடுக்கிறார்கள். கல்வித்தரத்துக்கும் வெற்றிக்கும் ஆசிரியர்களோ, பள்ளிகளோ, கல்வித்துறையோ பொறுப்பேற்கும் நிலை இல்லை. இன்று மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் சொந்த உழைப்பிலேயே அதை எடுக்கிறார்கள்.

8. அரசுப்பள்ளிகளுக்கு இன்று வரும் மாணவர்கள்,செல்வமோ கல்வித்திறனோ இல்லாத எளிய மாணவர்கள். அவர்களுக்கும் தரமான கல்வி கொடுக்கவேண்டுமென்றால் அதற்கு மேலும் அதிக தகுதி கொண்ட ஆசிரியர்கள் தேவை. இன்னமும் தீவிரமான பயிற்றுமுறையும் கண்காணிப்பும் தேவை. ஆனால் எந்த அரசுத்துறையும்போல ஊழலும் பொறுப்பின்மையும் மலிந்த ஒன்றாகவே கல்வித்துறை உள்ளது. அரசு,கல்வித்துறைக்கு எந்த விதமான கவனமும் அளிப்பதில்லை. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஆசிரியர் பணியிட நியமனத்தில் தகுதியை மட்டுமே அளவுகோலாகக் கொள்வதில்லை. ஆசிரியர்களை முற்றிலும் கண்காணிப்பதில்லை. பாடத்திட்டத்தை நடத்தி முடிக்கும் அரசுப்பள்ளிகளே மிகக்குறைவு.

என் மகன் அரசுப்பள்ளியில் பயிலும்போது மிகுந்த மனக்கொந்தளிப்புடன் இதைச் சொல்வதுண்டு. ’பாதிப்பிள்ளைகள் டியூஷன் வைக்கமுடியாதவர்கள் அப்பா. கணக்கு சயன்ஸ் எல்லாத்திலும் வாத்தியாரே இல்லை. வருகிறவர்கள் அரைமணி நேரம்கூடப் பாடம் நடத்துவதில்லை. பையன்கள் அழுகிறார்கள். எவ்வளவு பெரிய துரோகம் இது’ என்பான். அவன் கற்றது நாகர்கோயிலிலேயே பெரிய அரசுப்பள்ளியில். இதுவே உண்மைநிலை.

9 .இந்த அவலநிலையை மறைக்க அரசு போடும் வேடமே சமச்சீர் கல்வி. கல்வி சமமில்லாமல் இருப்பதற்கு அரசும் கல்வித்துறையும் கொண்ட அக்கறையின்மையே காரணம். அதனால்தான் நல்ல கல்வி கொடுக்கும் நிறுவனங்களை நோக்கி மக்கள் கடன்பட்டாவது பிள்ளைகளை அனுப்புகிறார்கள். அங்கே கல்விநிறுவனங்கள் நடுவே போட்டி உள்ளது. ஏனென்றால் அது வணிகம். வெற்றியைக் காட்டவில்லை என்றால் அடுத்த வருடமே அது லாபத்தை பாதிக்கும். ஆகவே பொறுப்பேற்க நிர்வாகம் தயாராக உள்ளது. அந்த நிலை இருப்பதனால்தான் அங்கே மக்கள் முண்டியடிக்கிறார்கள். ஆகவேதான் கட்டணம் அதிகமாக இருக்கிறது

10 .அந்தக் கல்விக்கட்டணத்தைக் குறைக்கச் சிறந்த வழி அதே அளவுக்குத் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் அளிப்பதுதான். அதை அளிக்கத் திராணியில்லாத அரசு,அக்கல்விக்கூடங்களைக் கட்டுப்படுத்த முயல்வது என்பது,தானும் கல்வியளிக்கமுடியாது, அளிப்பவர்களை அனுமதிக்கவும் மாட்டோம் என்ற நிலைப்பாடாகவே நடைமுறையில் உள்ளது

11. அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி சமச்சீர்நிலையை கொண்டுவருவதற்குப் பதில் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தைக் குறைத்து சமச்சீர்த்தன்மையை கொண்டுவரவே இந்தப் புதிய பாடத்திட்டம் முயல்கிறது. சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்புக்கான பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டே இதைச்சொல்கிறேன் -என் மகள் இவ்வருடம் பத்தாம்வகுப்புக்குச் செல்கிறாள். பாடங்கள் எந்தவிதமான சமகாலப்பிரக்ஞையும் பொறுப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சமச்சீர் கல்விப்பாடங்கள்,மாணவர்களின் கோணத்தில் அல்ல ஆசிரியர்களின் கோணத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய சர்வதேசப்போட்டிச்சூழலை ஒட்டி அவை அமைக்கப்படவில்லை. இன்றுள்ள ஆசிரியர்களுக்கு என்ன தெரியுமோ அதைக் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மேலதிகப் பயிற்சி இல்லாமல் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தவேண்டும் என்பதே இலக்காக இருந்துள்ளது. அந்த ஆசிரியர்கள் பெருபாலும் பத்துப்பதினைந்து வருடம் முன்பு பட்டம்பெற்றவர்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.

முழுக்கமுழுக்கத் தகுதியற்ற ஆசிரியர்கள் தகுதியற்ற ஆசிரியர்களுக்காக அமைத்துக்கொண்ட பாடத்திட்டம் இது. கருணாநிதி அரசை எப்போதுமே ஆசிரியர்கள் தங்கள் சொந்த அரசாக நினைப்பவர்கள். அவருக்குத் தேவை அவரது பெயர் ஆங்காங்கே வருவது. அந்த சலுகையை அவருக்கு வீசித் தங்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். மெட்ரிக் மாணவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய தர வீழ்ச்சி. இன்றைய போட்டியுகத்தில் பெற்றோர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள்.

12 நடைமுறையில், இந்த சமச்சீர் பாடத்திட்டம் ஏற்கப்பட்டால் அடுத்தவருடம் முதல் எல்லா மெட்ரிக் பள்ளிகளும் மத்தியபாடத்திட்டத்துக்கு மாறிவிடும். அதை அவர்கள் முறையாகப் பெற்றோருக்குத் தெரிவித்தும்விட்டார்கள்.ஆகவே சமச்சீர் தன்மை ஒருபோதும் ஏற்கப்படப்போவதில்லை. மூன்று வகைப்பாடுகள் இருப்பதற்குப்பதிலாக இரண்டு வகைப்பாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.

13. சமச்சீர் கல்வி என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. சர்வதேசப்போட்டிக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயாரிக்கும் முனைப்புள்ள பெற்றோர்கள், அதற்காகப் பணம் செலவிட முனையும் நிலையில் அதற்கான கல்விமுறை இருந்துகொண்டுதான் இருக்கும். அரசுக்கல்வியை அந்தத் தரத்துக்குக் கொண்டுசெல்லத் தொடர்ந்து முயல்வதே ஒரே வழியாகும்.

உதாரணமாக நாகர்கோயில்- சென்னை செல்ல அரசுப்பேருந்தில் 240 ரூ. தனியார் பேருந்தில் 900 ரூ. ஆனால் தனியார் பேருந்துகள்தான் அதிகமாக ஓடுகின்றன. காரணம் அரசுப்பேருந்து, 14 மணிநேரம் எடுக்கும். ஓட்டைக் கூரை, ஆடும் இருக்கை. தனியார் பேருந்து ஒன்பது மணிநேரத்தில் சொகுசாகக் கொண்டு சேர்க்கும். மக்களுக்குக் கொடுக்க மனமிருக்கிறது, தேவை இருக்கிறது. ஆகவே அந்தப் பேருந்து இருந்தே தீரும். அவற்றின் கட்டணத்தை அரசு தீர்மானிப்பதோ அந்தப் பேருந்துகளின் இருக்கைகளைக் கிழித்து அரசுப் பேருந்துகளைப்போல ஆக்க முனைவதோ சாத்தியமா என்ன?

14. அரசுக்குப் பல்லிளிக்கும் அதன் நடைமுறைத் தோல்விகளை மறைப்பதற்காகப் போலிநாடகம் ஆடும் நோக்கம் இல்லை என்றால் மெட்ரிக் பள்ளிகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு அரசுப்பள்ளிகளை மெட்ரிக் பள்ளிகளைப்போல, அல்லது அவற்றை விட மேலாக நடத்திக்காட்டும் சவாலை ஏற்றுக்கொள்ளட்டும். அதுவே நேர்மை.

15 கடைசியாக, பள்ளிப்பாடத்திட்டங்களில் நாலாந்தர அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி எழுதிச்சேர்ப்பதென்பது அயோக்கியத்தனம்.

ஆகவே ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்விப் பாடநூல்களைத் தூக்கி வீசியது நியாயமானதே. பழைய மெட்ரிக் பாடத்திட்டம் நீடிப்பதே சரி. ஒருமாதம் பாடம் நடத்திவிட்டோமே என்ற பேச்சு அபத்தம். அப்படி நடத்தக்கூடாது என்பதுதான் அரசு ஆணை. சொல்லப்போனால் அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து பள்ளிகள் கோடைகால விடுமுறையில் சீருடையில்லாமல் பிள்ளைகளை வரச்சொல்லிச் சட்டவிரோதமாகவே பாடங்களை நடத்தின. தரமில்லாத பாடங்களைப் படித்து அடுத்தவருடம் பிளஸ் டூவை சந்திப்பதை விட ஒருமாதகால இழப்பு பெரியவிஷயமல்ல

அடுத்தவருடம் சமச்சீர் கல்வி கொண்டுவரக்கூடும் என்றால் அது மெட்ரிக் பள்ளிகளைக் கீழிறக்குவதாக அல்லாமல் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளை அதைவிட மேலே கொண்டுசெல்வதாக இருக்கவேண்டும்

இதுவே உண்மையான யதார்த்தம். இதை மழுப்ப சும்மா பண்பாடு, சமத்துவம் என்றெல்லாம் பெரிய வெற்றுவார்த்தைகளைச் சொல்வதில் பொருளே இல்லை.

1 comment:

Jayachanthar said...

Thanks for explaining abt uniform education. Yes, TN school education is standard has gone over the last few years. Earlier, There were lots and lots of TN students in BITS. Now, there are only very few. I am not hearing good number of students clearing IIT-JEE or AIEEE.