Tuesday, May 17, 2011

முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா அளித்த பேட்டி.


தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது தரப்படும்?

பதில்: இப்போதுதானே பதவி ஏற்றிருக்கிறேன்.

கேள்வி: அரசு எதற்கெல்லாம் முன்னுரிமை தரும் என்ற தகவலை நீங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளீர்கள். தற்போது மின்சார வெட்டை நீங்குவதற்கு குறுகிய கால திட்டம் எதையும் வைத்திருக்கிறீர்களா?

பதில்: நான் இன்றுதான் பதவி ஏற்றேன். அமைச்சர்களும் இன்றுதான் தங்களுக்கான பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எதுவென்றாலும், துறைரீதியாக அவற்றைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய கால அவகாசம் தேவை.

கேள்வி: கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படுமா?

பதில்: இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். விரைவில் நிறைவேற்றப்படும்.

கேள்வி: இந்த அமைச்சரவையை புதியவர்களையும், பழையவர்களையும் கலந்து நீங்கள் நல்ல கலவையாக அமைத்திருக்கிறீர்கள். இதன் பின்னணியைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: இந்த அமைச்சரவையில் தமிழகத்தின் எல்லா பகுதிகள், சமுதாயம், மதம், சாதியினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த முயற்சியில் நான் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைச்சரவை, பழையவர்கள், அவர்களின் அனுபவம் மற்றும் புதியவர்கள் ஆகியோர் கலந்த நல்ல கலவைதான்.

கேள்வி: நீங்கள் ஜார்ஜ் கோட்டையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என்னாகும்?

பதில்: இப்போதே அது குறித்து எதுவும் கூற முடியாது. அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றிய முடிவை எடுப்போம்.

கேள்வி: முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த முதல் நாளில் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நிர்வாகமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. அரசு நிர்வாகம் என்பதே இல்லாமல் இருந்தது. அரசாங்கப் பணி என்பது நடைபெறவே இல்லை. எனவே கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநிலம் வெறும் 5 ஆண்டு கால பின்னடைவை மட்டும் அடையவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது, சீரழிந்து போய்விட்டது. எனவே தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், மீண்டும் கட்ட வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.

விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். நெசவுத்துறையை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இப்படி துறை தோறும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தை புனரமைக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்க்கையை நடத்தினர். ஊடகங்களுக்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை இருந்தது. இனிமேல் எல்லாரும் சுதந்திரமாக வாழலாம். தேர்தல் பிரசாரத்தின் போதே ஒவ்வொரு கூட்டத்திலும் இதைச் சொன்னேன்.

ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.

எனவே படிப்படியாக நிலமை மாறும். தமிழக மக்களைப் பொறுத்தவரை இனி அச்ச உணர்வு தேவையில்லை. நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும், பராமரிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு செழிப்படையும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உயர்வு பெறும்.

கேள்வி: நீங்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் உங்களது மங்களகரமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும். அதை புனரமைத்த பிறகு நிச்சயம் மேலே நோக்கி செல்லும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரம் அழிந்துபோன நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். அதை மேலேங்கி வளரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளதே?

பதில்: யாரும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் முழுமையான பாதுகாப்பு தரப்படும் என்றார்.

நிருபர்களுடன் டீல்:

பேட்டியின் முடிவில் ஜெயலலிதா கூறுகையில், `நட்புரீதியாக நமக்குள் ஒரு டீல் வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒருமுறை உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் பதிலளிக்கிறேன். அதை விட்டுவிட்டு, நுழைவாயிலில் அருகே, வீட்டருகே, ஹோட்டல் அருகே என்று நின்று கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது. சரியா?' என்று கேட்க, நிருபர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

நிருபருக்கு அட்வைஸ்:

முன்னதாக அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிருபரின் செல்போனில் இருந்து சினிமா பாட்டு ரிங் டோனாக ஒலித்தது. அப்போது ஜெயலலிதா`நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் மரியாதை நிமித்தமாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை சந்திக்க வருவதற்கு முன்பு செல்போன்களை நீங்கள் அணைத்து வருவதை கடைப்பிடித்திருக்க வேண்டும்' என்றார்.

இன்று மதியம் முதல் அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் ஜார்ஜ் கோட்டையில் பகல் 2 மணிக்கு நடக்கவுள்ளது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

No comments: