Tuesday, May 17, 2011

என்ஜினீயரிங் இடங்கள் 30 ஆயிரம் அதிகரிப்பு.


2011-12ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:

வருகிற கல்வியாண்டிற்கு பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் 5 இடங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 488 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 460 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் அடங்கும். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு கவுன்சிலிங் முடிவில் 8,172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தங்களது பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மனு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மூலம் 30 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டில் புதிதாக 120 கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. இன்னும் 1 மாதத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும். இதன் மூலம் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 472 கல்லூரிகள் இருந்தன.

இந்த ஆண்டு 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் தலைமுறை மாணவர்கள் 78 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். என்ஜினீயரிங் விண்ணப்பம் வினியோகம் செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

No comments: