Tuesday, May 17, 2011

பெட்ரோல் விலை உயர்வு : கார்களை விட்டு பைக்குக்கு தாவும் வாடிக்கையாளர்கள்.


சட்டசபை தேர்தல் முடிவுகள் தெரிந்த கையோடு, பெட்ரோல் விலையை மத்திய அரசு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 9 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வந்த அதீத வளர்ச்சியை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனவாம்.

மேலும், இன்னும் சில நாட்களில் டீசல் விலையும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் உலா வருவதால், கார் நிறுவனங்கள் கவலை அதிகரித்துள்ளதாம். பெட்ரோல் விலை உயர்வால் புதிதாக கார் வாங்குவதை தவிர்த்து, பைக் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுதான் கார் நிறுவனங்களின் கவலைக்கு காரணம்.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக சைக்கிள் விற்பனை கணிசமாக உயரும் என்பதும ஆட்டோமொபைல் துறையின் கருத்தாக உள்ளது. இதற்கு சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் தலையசைத்துள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையிலிருந்து கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தப்புவதற்கு சில வழிமுறைகள்:

1.குறைந்த தூரம் செல்வதற்கு கார், பைக்குகளை பயன்படுத்தாமல் நடந்து செல்வதே சால சிறந்தது. பெட்ரோலும் மிச்சம், வாக்கிங் செய்த பலனும் கிட்டும்.

2.தரமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பெட்ரோல் போடுங்கள். சில பங்குகளில் போடப்படும் கலப்பட பெட்ரோல் உங்கள் வாகனத்தின் எஞ்சினை சுவாகா செய்துவிடும்.

3.குறிப்பிட்ட இடைவெளிகளில் வாகனத்தை சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையாது.

4.டிரைவிங்கை பொறுத்து வாகனத்தின் மைலேஜ் கொடுக்கும் திறன் மாறுபடும். எனவே, வாகனத்தை சீராக ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

5.சிக்னல்களில் நிற்கும்போது, ஆக்சிலேட்டரை அழுத்தி எஞ்சினை உறுமவிடாதீர்கள். இதனால், அதிக எரிபொருள் செலவாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.டயர்களில் சரியான அளவு காற்றின் அழுத்தம் இருக்கிறதா என்பதை பார்த்துகொள்வது நல்லது. டயர்களில் சரியான அளவு காற்று இல்லாவிட்டால் அதிக எரிபொருளை எஞ்சின் வி்ழுங்கும்.

இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்தால், பெட்ரோல் விலை உயர்வு நம் பாக்கெட்டை பதம் பார்க்காது.

1 comment:

மதுரை சரவணன் said...

சிறந்த ஐடியாவை சொல்லியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்