Tuesday, May 17, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை.


ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை; சி.பி.ஐ. போலீஸ் தீவிரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் பணம் எப்படியெல்லாம் கை மாறியது என்பது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பிறகு இந்தியாவுக்கு வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு சென்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் டாடா தொழில் நிறுவனத்துக்கு சொந்தமான வோல்டாஸ் நிறுவனத்தின் நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் ஆடிட்டர் வசம் சென்றுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் கைமாற்றி கொடுத்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் முதலில் 18 பேரின் பெயர்களில் நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அந்த நிலம் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்களில் ஒருவரான மலேசிய சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டது.

திடீரென ஒரு வாரம் கழித்து அந்த நிலம் மலேசியாவைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியது. இந்த மாற்றத்தை ராஜாத்தி அம்மாளின் மற்றொரு ஆடிட்டரான ரத்தினம் செய்ததாக கூறப்படுகிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் கை மாறியது தொடர்பான சர்ச்சையில் உண்மையை தெரிந்து கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதை ஏற்று ஆடிட்டர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் இருவரும் நேற்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார்கள். அவர்களிடம் வோல்டாஸ் நிறுவன நிலம் ஏன், எதற்காக, எப்படி கை மாற்றப்பட்டது என்று விசாரித்தனர். இதற்கு ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் அளித்த பதில் பதிவு செய்யப்பட்டது. அவை தனித்தனி ஆவணங்களாக தொகுக்கப்பட்டு வருகின்றன.

கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவரின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ந்தேதி அளிக்கப்பட உள்ளது. அப்போது வோல்டாஸ் நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங்களை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பொறுத்தே கனிமொழி எம்.பி., சரத்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

No comments: