Tuesday, May 17, 2011

சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு.


தமிழக சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் கேட்ட சீட் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக தேர்தல் முடிந்து, அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்ட நிலையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

தங்களது ஆதரவே இல்லாமல் அதிமுக மாபெரும் வெற்றியடைந்தது அக் கட்சிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிமுக ஒரு சக்தியே இல்லை என்ற அளவுக்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இந் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழுவினர், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது.

அதில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது.

எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நதி நீர் பிரச்சனைகளைத் தீர்க்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு அமலாக்க வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

2 comments:

ASHOK said...

ஏங்க வைக்கோ வெல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப் போகுது

kaja nazimudeen said...

வை. கோ..... அப்பிடினா யாருங்க!?