Tuesday, May 17, 2011

எம்.பி.பி.எஸ். : முதல் நாளில் 9,000 விண்ணப்பம் விற்பனை - ஆண்டுக் கட்டணம் எவ்வளவு?



சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபையிடம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை பெறும் மாணவி.


தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை (மே 16) மட்டும் 9,000 மாணவ-மாணவியர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2010) விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 6,249 மாணவர்களும், 2009-ம் ஆண்டு விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 5,000 மாணவர்களும் விண்ணப்பத்தைப் பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். (இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம்.) படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 9,000-மாக அதிகரித்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, சேலம்: சென்னை மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நாளான திங்கள் கிழமையன்று மற்ற இடங்களைவிட அதிகபட்சமாக 1,350 பேரும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 1,060 பேரும், கோவையில் 989 பேரும், சேலத்தில் 893 பேரும் விண்ணப்பம் வாங்கியுள்ளனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பிற இடங்களையும் சேர்த்து மொத்தம் 9,000 மாணவர்கள் திங்கள்கிழமை விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க தொடர்ந்து விடுமுறை இன்றி வரும் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

முதல் கட்டமாக 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன; முதல் நாளே 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கூடுதலாக 5,000 விண்ணப்பங்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

கட்-ஆஃப் அதிகமாக இருந்தாலும்கூட...

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 650-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய அதிக கட்-ஆஃப் மதிப்பெண் ஏராளமான மாணவர்கள் எடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 வாங்கி, ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 65 மாணவர்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்கள் முதல் ஒவ்வொரு வகுப்புவாரி மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல்:

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 20-ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும்; அதாவது ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் எடுத்த மாணவர்களை வரிசைப்படுத்த சமவாய்ப்பு எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி தொடங்கும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். - ஆண்டுக் கட்டணம் :

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆகவும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.8,495-லிருந்து ரூ.10,290-ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தில் மாற்றம் ஏன்?

எம்.பி.பி.எஸ். படிப்பில் கல்விக் கட்டணம் ரூ.4,000, சிறப்புக் கட்டணம் (மாணவர் அனுமதி மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் உள்பட) ரூ.950, டெபாசிட் தொகை ரூ.1,000, நூலகக் கட்டணம் ரூ.1,000, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.4,910, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்த்தல் கட்டணம் ரூ.50, எல்ஐசி காப்பீடு கட்டணம் ரூ.170, செஞ்சிலுவைச் சங்க கட்டணம் ரூ.10, இதர கட்டணம் ரூ.100, கொடி நாள் கட்டணம் ரூ.100 என ஆண்டுக் கட்டணமாக மொத்தம் ரூ.12,290 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.3,825-லிருந்து ரூ.4,910-ஆக அதிகரித்துள்ளதாலும் சிறப்புக் கட்டணம் ரூ.500-லிருந்து 950-ஆக அதிகரித்துள்ளதாலும் மற்ற இதர கட்டணங்களாலும் எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆக உயர்ந்துள்ளது.

பி.டி.எஸ். படிப்புக்கு...

இதே போன்று சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக உயர்ந்துள்ளது.

கலந்தாய்வின்போது...

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் பெறும்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மேலே குறிப்பிட்ட ஆண்டுக் கட்டணம் ரூ.12,290-ஐ டி.டி.-யாகச் செலுத்த வேண்டும்; அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ.10,290-ஐ டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு...

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்லூரிக்கு ஏற்ப ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பி.டி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.85,000-மாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கலந்தாய்வின் போது சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு அனுமதிக் கடிதம் பெறும் மாணவர்கள், ரூ.25,000-த்தை முன்தொகையாக டி.டி. எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவில் செலுத்த வேண்டும்; பின்னர் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் அந்த மாணவர் சேரும்போது ஆண்டுக் கட்டணத்தில் முன்தொகையாகச் செலுத்திய ரூ.25,000 கழித்துக் கொள்ளப்படும்.

1 comment:

எனது கவிதைகள்... said...

பயனுள்ள தகவல்.
நண்பருக்கு ஒரு சிறிய வேண்டுகோள்
எனது மகள் மும்பையில் +2 தேர்வு எழுதியுள்ளார், இன்னும் தேர்வுமுடிவு வரவில்லை அனேகமும் இந்தமாத இருதியில் வரவாய்ப்புண்டு.
இப்படி மும்பையில் படித்தவர்கள் தமிழகத்தில் MBBS/BDS/BVSC ( OR)BE போன்ற படிப்பில் சேர வழிமுறை என்ன என்பதினை விபரமாக தெறிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
எனது மின்னஞ்சல் முகவரி:unmaivrumbi@webdunia.com


உண்மைவிரும்பி.
மும்பை.